என் மலர்
பிரான்ஸ்
- பிரெஞ்சு நடிகை கேத்தரின், கவிதை வாசித்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய திரைப்பட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நிகழ்வுகளில் பரபரப்பான செயல்கள் அரங்கேறுகின்றன.
அவ்வகையில், பிரான்சில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த பெண் உக்ரைன் தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை தலையில் ஊற்ற ஆரம்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பாதுகாவலர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் இயக்குனர் தியரி ப்ரீமாக்ஸ், கடந்த வாரம் பேசும்போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில், பிரெஞ்சு நடிகை கேத்தரின் டெனியூவ், உக்ரைன் கவிஞர் லெஸ்யா உக்ரைன்கா எழுதிய ஹோப் என்ற கவிதையை வாசித்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினர் அல்லது திரைப்பட நிறுவனங்களின் மீது கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு திரைப்படவிழாவிலும் அந்த தடை அமலில் உள்ளது என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கடந்த திரைப்பட விழாவில், உக்ரைன் பெண் ஒருவர் ரஷிய படைகளுக்கு எதிராக சிவப்புக் கம்பளத்தின் மீது திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார். மேலாடை முழுவதையும் கழற்றினார். மார்பில் உக்ரைன் தேசியக் கொடியின் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தார். அத்துடன், எங்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நிறுத்து என்ற வாசகத்தை மார்பில் எழுதியிருந்தார்.
- ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால்.
- நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 28ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகி இருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
36 வயதான ரபேல் நடால் நேற்று அளித்த பேட்டியில், "விஷயங்கள் எப்படி மாறும் என்பது தெரியாது. ஆனால் அடுத்த ஆண்டு எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் தற்போது பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை. நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை' என்று தெரிவித்தார்.
ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14 முறை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாரீஸ் நகருக்குச் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
- அதன்பின், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார்.
பாரீஸ்:
ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவிகளை கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு பெரிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்துப் பேசினார். அதன்பின் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்க்களத்தில் விரைவாக இயங்கக்கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது.
இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர்.
உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் வலியுறுத்தினார்.
- பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை தீ வைத்து எரித்துள்ளார்.
- ஆசிரியருக்கு 1.31 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு.
பிரான்சில் உள்ள பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை எரித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோ என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை தீ வைத்து எரித்துள்ளார்.
இதுதொடர்பாக விக்டர் மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.31 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கல்வி வாரியம் தெரிவித்தது.
- உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
- போர் தொடங்கியது முதல் இதுவரை 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர்
பாரிஸ்:
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு உரையாற்றினார்.
இதையடுத்து, பல மாதங்களுக்குபின், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முத் நகரில் ரஷியப்படைகள் கடுமையாக தாக்கின.
இந்த தாக்குதலில் அர்மன் சோல்டின் (22), என்ற பிரான்ஸ் பத்திரிகையாளர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் போர் தொடங்கியது முதல் இதுவரை 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை பிரான்ஸ் அதிபர் அமல்படுத்தினார்.
- இது போராட்டக்காரர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. நாடு முழுதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை அதிபர் மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே, இத்திட்டத்துக்கு கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை அதிபர் மெக்ரான் அமலுக்கு கொண்டு வந்தார். இச்சட்டத்தை அரசிதழில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது போராட்டக்காரர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இதற்கிடையே நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஓய்வூதிய சீர்திருத்த மசோதா தேவை. அனைவரின் ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் அளிக்க இந்த மாற்றங்கள் தேவைப்பட்டன. படிப்படியாக அதிகமாக வேலை செய்வது நமது நாட்டிற்கு அதிக செல்வத்தை உருவாக்குகிறது என தெரிவித்தார்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
- இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை சந்தித்தார்.
இதில் ரூனே முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் வென்றார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சை சந்தித்தார்.
இதில் ரூப்லெவ் 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
- பிரான்சில் போராட்டங்கள் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார்.
இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை அதிபர் மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் இத்திட்டத்துக்கு கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை அதிபர் மெக்ரான் அமலுக்கு கொண்டு வந்தார்.
இச்சட்டத்தை அரசிதழில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ஓய்வு வயது மசோதாவை திரும்ப பெற கோரி போராட்டங்கள் கடுமையாக நடந்து வரும் நிலையில் தற்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் பிரான்சில் போராட்டங்கள் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான ஜோகோவிச் 3வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 2-வது காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
மற்றொரு காலிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே, ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார். இதில் ஹோல்ஜர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஏற்கனவே 3வது சுற்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் வென்றார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் ஜெர்மனி வீரர் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.
இதில் ரூப்லெவ் 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் வென்று அரையிதிக்கு முன்னேறினார்.
- ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ராக்கெட் ஏவப் படுகிறது.
- 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும்.
பிரஞ்சு கயானா:
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே வியாழன் கிரகத்தின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.
அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ராக்கெட் ஏவப் படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது.
ராக்கெட் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் அதிலிருந்து விண்கலம் பிரியும். அது 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும். பின்னர் வியாழன் கிரகம் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை கண்காணிக்கும்.
குறிப்பாக வியாழனின் நிலவில் புதையுண்ட கடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் இந்த விண்கலம், வியாழனின் வளிமண்டலம், அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், கலவைகள் மேற்பரப்புகள் மற்றும் பரந்த வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு செய்யும். வியாழனில் பல மாதங்கள் சுற்றும் விண்கலம் இறுதியாக கேனிமீட் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். விண்கல் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படும். அதி நவீன கருவிகள், வியாழனின் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதற்கு ஒரு ரேடார் ஒலிப்பான் உள்ளிட்டவை உள்ளன. ஆய்வில் குறிப்பாக கேனிமீட் நிலவில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்படும்.
இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, சூரிய குடும்பத்தில் உயிர்கள் தோற்றம் நமது பூமிக்கு தனித்தன்மை வாய்ந்ததா? அல்லது சூரிய குடும்பத்தில் அல்லது அதற்கு அப்பால் வேறு எங்காவது நிகழுமா? என்று ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.