search icon
என் மலர்tooltip icon

    கிரீஸ்

    • சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளன.
    • இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.

    கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.

    சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • விமானம் புறப்படும் நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏசி வேலை செய்யவில்லை.
    • கடும் வெப்பம் நிலவிய நிலையில் 3 மணி நேரம் விமானத்திலேயே காத்திருந்த அவலம்.

    கிரீஸ் நாட்டின் எதென்ஸ் நகரில் இருந்து கத்தாரின் தோகாவிற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.சி. வேலை செய்யவில்லை.

    கிரீஸ் நாட்டில் தற்போது 34 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. சுமார் 3 மணி நேரம் பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

    34 டிகிரி வெயில் காரணமாக விமானத்திற்குள் வெப்ப நிலை அதிக அளவில் தாக்கியது. இதனால் பயணிகள் வியர்வையால் நனைந்தனர். பெரும்பாலான பயணிகள் குறிப்பாக ஆண் பயணிகள் தங்களது மேலாடையை கழிற்றினர். தங்கள் மீது வடிந்தோடும் வியர்வையை சட்டையால் துடைத்தனர்.

    அதேவேளையில் சில பெண் பயணிகள் அதிக வியர்வை காரணமாக மயக்கம் அடைந்தனர். இதனால் அருகில் இருந்த மற்ற பயணிகள் காற்று வீசி அவர்களுக்கு உதவி செய்தனர்.

    பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் தரையிறக்கப்பட்டனர். இவ்வளவு அவதிப்பட்ட அவர்களுக்கு ஒரு கப் தண்ணீரும், சிறு குளிர்பானம் மட்டுமே வழங்கப்பட்டதாக ஆதங்கம் தெரிவித்தனர். சுமார் 16 மணி நேர காலதாமதத்திற்கு பிறகு மாற்று விமானம் மூலம் பயணிகள் தோகா சென்றடைந்தனர்.

    • டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.
    • சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர்.

    ஏதென்ஸ்:

    ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக ஏதென்ஸ் விளங்குகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவு சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன. பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறமாக மாறி காட்சியளித்தது.

    இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர். டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

    அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தகாலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வாடிக்கைதான். இந்தநிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சாகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்ததால் கிரீசை ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியதுபோல புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

    • தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
    • மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏதென்ஸ்:

    உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும், தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் இதனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின் மூலம் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்தெடுக்கவும் உரிமை வழங்கப்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏதென்ஸ் நகர வீதிகளில் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் அமைப்பின் தலைவர் ஸ்டெல்லா பெலியா கூறும் போது, "இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் ஆகும்" என்று தெரிவித்தார்.

    இந்த திருமணத்துக்கு ஆர்த்த டாக்ஸ் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான கிரீஸ் முதன் முதலாக ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 6 ஆயிரம் டன் உப்புடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது.
    • கப்பலில் 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் இருந்தனர்.

    கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

    லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடும் புயலில் சிக்கி அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.

    விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றன. கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்தது.

    • கிரீஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் கேத்ரினா பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
    • கிரீஸ் சென்ற பிரதமர் மோடி. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இந்தியா புறப்பட்டார்.

    ஏதென்ஸ்:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்கில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து கிரீஸ் சென்றடைந்தார்.

    தலைநகர் ஏதென்சில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து, கிரீஸ் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார்.

    அதன்பி்ன் கிரீஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். பல்வேறு வி.ஐ.பி.,க்களையும் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், கிரீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவருக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் கிரீஸ் உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

    • கிரீஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
    • அப்போது, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா என்றார்.

    ஏதென்ஸ்:

    தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு கிரீஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:

    சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா.

    இதன்மூலம் நிலவில் நம் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

    சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

    கிரீஸ் எனக்கு உயரிய விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா-கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது.

    இரு பெரும் நாகரீக நாடுகள் இன்று நட்புறவு கொண்டுள்ளது. வானவியலும், கணிதவியலும் இணைந்துள்ளது.

    கொரோனா காலகட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு வழஙகி உள்ளோம். பல லட்சம் பேர்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

    நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் 5ஜி சேவையை கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.

    • கிரீஸ் நாட்டின் உயர்ந்த, கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
    • இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ஏதென்ஸ்:

    பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

    கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சுக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார்.

    இதைத் தொடர்ந்து, கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்நிலையில், கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த விருது கிரீஸ் நாட்டு மக்கள் இந்தியாவின் மீது வைத்துள்ள மரியாதையின் அடையாளாக இருக்கிறது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 40 வருடங்களுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆவார்
    • சந்திரயான்-3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான வெற்றி

    சரித்திர புகழ் பெற்ற பண்டைய கிரேக்க நாகரிகத்தின் அடையாளமாகவும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பிரியர்களின் விருப்பமான நாடாகவும் விளங்குகிறது, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கிரீஸ்.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 3-நாள் உச்சி மாநாடு நிறைவடைந்ததும், இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். 1983-ல் ஒரு இந்திய பிரதமர் சென்றதை அடுத்து, 40 வருடங்களுக்கு பிறகு, மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆவார்.

    2019-ல் கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அவரை கிரீஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜார்ஜ் கெராபெட்ரிடிஸ் வரவேற்றார்.

    மோடி தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியிலும், அவர் சென்ற வழி நெடுகிலும் இந்தியர்கள் இந்திய கொடியை ஏந்தியபடி அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். பல போர்களில் உயிர் நீத்த கிரீஸ் நாட்டு வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம் உள்ள சின்டாக்மா சதுக்கத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு மோடி மற்றும் கிரீஸ் அதிபர் கேட்டரீனா சகெல்லரோபவுலவ் (Katerina Sakellaropoulou) இடையே நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே நிலையான வளர்ச்சியை உருவாக்கவும், இரு நாட்டு நல்லுறவை வளர்க்கும் விதமாக பல விஷயங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சந்திரயான்-3 வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த கிரீஸ் அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி, "சந்திரயான்-3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான வெற்றி" என கூறினார். மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார்.

    தனது சுற்றுபயணத்தின் அங்கமாக பிரதமர் மோடி, இரு நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் கிரீஸ் நாட்டில் உள்ள இந்தியர்களையும் சந்திக்க இருக்கிறார்.

    • டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
    • இறந்தவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்ப அலை, வறண்ட மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளால் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

    கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக வட கிழக்கு பகுதியில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியானது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய மக்கள், துருக்கியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான முக்கிய பாதையாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

    அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படவில்லை என்பதால், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளின் சடலங்களாக இருக்கலாம். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.
    • காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.

    ஏதென்ஸ்:

    ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது.

    குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீசில் உள்ள ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல் சோர்பு மற்றும் எவியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மேலும் விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

    இந்த நிலையில் எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கியது.

    சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 2 விமானிகள் இருந்தனர். காட்டுத்தீ மீது தண்ணீரை ஊற்றி விட்டு அந்த விமானம் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.

    தரையில் மோதிய விமானம் வெடித்து சிதறியதால் தீ பிழம்பு எழுந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானிகள் 2 பேர் பலியானதையடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.

    • தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்தது தெரியவந்தது.
    • பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது.

    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (வயது 55) பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, கடந்த மே 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 300 தொகுதிகளை கொண்ட கிரீஸ் நாட்டில் ஆட்சியமைக்க 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. 

    இதனால் அங்கு நேற்று மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பிரதமர் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 158 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மிட்சோடாகிஸ் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது.

    99.70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மிட்சோடாகிசின் புதிய ஜனநாயக கட்சி 40.55% வாக்குகளை பெற்றது. சிரிசா கூட்டணி 17.84% சதவீத வாக்குகள் பெற்றது. கடந்த அரை நூற்றாண்டில் கிரீஸ் தேர்தல்களில் இதுவரை காணப்படாத மிகப்பெரிய வெற்றியாகும்.

    புதிய ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி கேதரீனா ஸகேல்லாரோபவுலவ், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றார்.

    தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்தது தெரியவந்தது. இதனால் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கருத்துக்கணிப்புகளை மீறி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மாபெரும் வெற்றி பெற்று மறுபடியும் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    ×