search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
    X

    வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

    • காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல்.
    • ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை வான் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வீழ்த்தியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவடையாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் மூன்று போர் நிறுத்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதற்கு ஹமாஸ் அமைப்பினர் பதில் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக முதல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும், சில திருத்தங்களை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதனால் போர் நிறுத்தத்திற்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் லெபனான் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்று வடக்கு இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

    காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் முக்கியமான ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    55 வயதான தலேப் சமி அப்துல்லா (ஹிஸ்வுல்லாவின் மூத்த கமாண்டர்) போர் தொடங்கியபோது கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள். 70 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்.

    Next Story
    ×