என் மலர்
உலகம்

"ரெயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி.." பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி

- பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
- 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் கடந்த மார்ச் 11 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது. 24 மணி நேரத்திற்கு பின் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவடிக்கையில் ரெயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Latest from #BLAVisuals of the Attack and Seizure of Jaffar Express by Baloch Liberation Army pic.twitter.com/WDiPGEi1TY
— Gidroshian Baloch گِدروشین بلوچ (@AzaadBalach) March 12, 2025
இதற்கிடையே இந்த ரெயில் கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலைப் படைக்கு பின்னால் இந்தியா உள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் அதன் சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உள்நோக்கிப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.