என் மலர்
உலகம்
காசா பொதுமக்கள் வெளியேற 4 மணி நேரம் அவகாசம் விதித்த இஸ்ரேல்
- அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
- காசாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதி மீது இஸ்ரே லின் போர் தாக்குதல் இன்று 30-வது நாளாக நீடித்து வருகிறது.
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் காசா மீது வான், கடல், தரை என மும்முனை தாக்குதல் நடத்துகிறது. இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குழந்தைகள், பெண்கள் உள்பட 9,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் காசாவில் உள்ள மிகப்பெரிய ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். ஹமாஸ் அமைப்பு முக்கிய தளபதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. மத்திய காசாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டதில் அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே அல்-மகாசி அகதிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும் பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் 2 குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தது.
இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனிய மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள் என்று தெரிவித்துள்ளது.
காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசாவுக்குள் புகுந்துள்ள இஸ்ரேல் தரைப்படை, காசா சிட்டியை சுற்றிவளைத்து முன்னேறி வருகிறது. அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
இருதரப்பினர் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வடக்கு காசாவில் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இஸ்ரேல் போர் விதியை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அங்கு ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பலியானவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேற 4 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சலா அல்-தீன் தெருவை காசாவில் உள்ள மக்கள் வெளியேற்றுவதற்கான பாதையாக பயன்படுத்தலாம். அங்கு 4 மணி நேரம் தாக்குதல் நடத்தப்படாது பொதுமக்கள் தெற்கு நோக்கிச் செல்லுங்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.