search icon
என் மலர்tooltip icon

    மெக்சிகோ

    • சுமார் 800 கிலோ எடையுள்ள நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் பணியாற்றினர்.
    • சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் உலகின் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. வெனுஸ்டியானோ கரான்சா நகரில் 17வது ஆண்டு டோர்டா கண்காட்சியின்போது டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை, 242.7 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள். சுமார் 800 கிலோ எடையுள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் இணைந்து பணியாற்றினர்.

    இந்த கண்காட்சியானது, டோர்டா சமையல் கலைஞர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோசா வென்ச்சுரா போன்ற சமையல்காரர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தங்களின் கடல் உணவு டோர்டா உணவகத்தை மூட வேண்டியிருந்தது. இந்த கண்காட்சி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என கூறுகின்றனர்.

    • கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது.
    • திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா.

    இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார். ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது.

    கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.

    திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.

    திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறும்போது, "இயற்கையிடம் மழை, உணவு, மீன் வளம் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை" என்றார்.

    இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
    • பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெக்சிகோ தலைநகரில் தெற்கில் அமைந்துள்ள குயர்னவாகா நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மிகவும் பிரபலமானது. இங்கு, புதிதாக தொங்கு பாலம் ஒன்றை அந்நகர மேயர் திறந்து வைத்தார்.

    இந்த தொங்கு பாலம், மர பலகைகள் மற்றும் உலோக சங்கிலிகளால் சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. மேயரால் பாலம் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் உள்பட மக்கள் சிலர் பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில், சுமார் 20 பேர் நீரோடையில் விழுந்து படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு எலும்பு முறுவு ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாலம் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பாலம் அறுந்து விழுந்த சம்பவம் மேயர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மத்திய மெக்சிகோ பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 3 பேர் மாணவர்கள் மற்றும் 2 பேர் மாணவிகள் ஆவார்கள்.

    மெக்சிகோ:

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் பொதுமக்களை குருவிகளை சுடுவது போல மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வருகிறது. இதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்கும்.

    மெக்சிகோ நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மத்திய மெக்சிகோ பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் 5 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 65 வயது பெண் ஒருவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 3 பேர் மாணவர்கள் மற்றும் 2 பேர் மாணவிகள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட உயர்நிலை பள்ளி மாணவ-மாணவிகள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களை மெக்சிகோ போலீசார் தேடி வருகிறார்கள்.

    பள்ளி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

    ×