என் மலர்
உலகம்

ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் - ஒருவர் உயிரிழப்பு

- உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இரண்டு விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஷியா மீது உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று காலை தலைநகர் மாஸ்கோ உள்பட 10 பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்து வந்தன. அவற்றை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மாஸ்கோவை குறிவைத்து இயக்கப்பட்ட உக்ரைனின் சுமார் 70 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷியாவின் 10 பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக குர்ஸ்க் பகுதியில் 126 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. டிரோன் தாக்குதலை தொடர்ந்து இரண்டு விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இன்று சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.