என் மலர்
பாலஸ்தீனம்
- லாரிகளில் உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதும் மக்கள் முற்றுகையிட்டதாக தகவல்.
- கூட்ட நெரிசல் காரணமாக அச்சுறுத்தல் இருந்ததாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- இஸ்ரேல் ராணுவம்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதனிடையே போரின் விளைவால் காசா மக்கள் தொகையில் கால்வாசி பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், பல லட்சம் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாகவும் ஐ.நா. கவலை தெரிவித்தது.
இதனால் குறைவான அளவில் கிடைக்கும் நிவாரண பொருட்களை பெற மக்கள் முண்டியடிப்பதாகவும், ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண பொருட்களை கொள்ளையடித்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் காசாவின் மேற்கு பகுதியில் உள்ள நபுல்சி ரவுண்டாபவுட் என்ற இடத்திற்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வருவதாக வந்த தகவலின் பேரில் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
நிவாரண பொருட்களை கொண்டு வரும் லாரிகளை அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். நிவாரணப் பொருட்கள் வந்த லாரிகளுடன் இஸ்ரேல் ராணுவ வாகனங்களும் வந்தன. லாரி அப்பகுதிக்கு வந்ததும், மக்கள் லாரியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது இஸ்ரேல் ராணுவம் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 104 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம் "நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் முண்டியடித்தனர். அப்போது அருகில் இருந்து இஸ்ரேல் ராணுவ வாகனத்தை நோக்கி வந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தும் விடுப்பதாக நம்பப்பட்டது. இதனால் தங்களை காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தினர்" எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான உபகரணங்கள் இன்றி தள்ளாடி வரும் நிலையில் தற்போதைய இந்த கொடூர சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், கழுதை வண்டியில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பரிதாப நிலையை காண முடிந்தது.
இதற்கிடையே அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உடனடி போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.
காசா:
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை ராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்தார்.
பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
- வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
- பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.
அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.
ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:
வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.
உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.
பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.
விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
?STATEMENT: WFP is pausing the delivery of lifesaving food assistance to Northern Gaza until safe conditions are in place for our staff and the people we are trying to reach.
— World Food Programme (@WFP) February 20, 2024
Our decision to pause deliveries to the north has not been taken lightly. The safety and security to… pic.twitter.com/eNc7d3kZDZ
வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
- ஐ.நா.வின் நிவாரண குழுக்கள் சார்பில் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மக்களுக்கு போதுமானதாக இல்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நான்கு மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
ஐ.நா.வின் நிவாரண குழுக்கள் சார்பில் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அது காசா மக்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டபட்டுள்ளது.
வடக்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள் உணவை வாங்குவதற்காக வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். சிறுவர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் ஆகியவற்றால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் குழந்தைகள் நிறுவனம் கூறும்போது, "ஊட்டச்சத்து நெருக்கடியின் விளிம்பில் காசா பகுதி உள்ளது. வடக்கு காசாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. வாரக்கணக்கில் அனைத்து மனிதாபிமான உதவிகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு காசாவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மைக் ரியாக் கூறும்போது, "பசி மற்றும் நோய் ஒரு கொடிய கலவையாகும். பசியுள்ள, பலவீன மான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகள் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இது ஆபத்தானது மற்றும் சோகமானது மற்றும் நம் கண்களுக்கு முன்பாக நடக்கிறது" என்றார்.
- தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
- கடும் வான்வழி தாக்குதலுக்கு மத்தியில் பிணைக்கைதிகளை மீட்டுள்ளது.
இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதத்துக்கும் மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது.
நேற்று தெற்கு காசா எல்லையில் அமைந்துள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
வான்வழியாக சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் 7 பேர் இறந்து விட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
ரபா நகரில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய சோதனையில் அங்குள்ள ஒரு வீட்டில் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 2 பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதில் ஒருவரது பெயர் பெர்ணாண்டோ சைமன் (வயது 60) மற்றொருவர் பெயர் லூயிஸ்ஹர்க் (70). தற்போது 2 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
- இதுவரை 28,000 பேர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்
- உயிரிழந்துள்ள ஹாசெம் ஹனியே ஒரு கல்லூரி மாணவர்
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
125 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இப்போரில் இஸ்ரேலிய ராணுவ படை (Israeli Defence Forces) பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.
தற்போது வரை சுமார் 28,000 பேர் காசாவில் உயிரிழந்து விட்டனர்; அப்பகுதி மக்களில் பாதிக்கும் மேல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே (Hazem Ismail Haniyeh) இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 வயதான ஹாசெம் ஒரு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் முன்னரே, ஹனியே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
- போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
- பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.
இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.
இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.
அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.
சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
- போரில் இதுவரை 26,751 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
- நிரந்தர போர்நிறுத்தத்தை இஸ்ரேல் புறக்கணித்ததாக ஹனியே கூறினார்
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தொடங்கிய போர் தீவிரமாக 115 நாட்களை கடந்து தொடர்கிறது.
இஸ்ரேல் ராணுவ படையினர் ஹமாஸ் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.
இன்று வரை 26,751 பேர் உயிரிழந்ததாகவும், 65,636 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது. உயிரிழந்தவர்களில் பலர் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் கூறியது.
போர் இடைநிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் கோரிக்கை வைத்தும் இஸ்ரேல் அவற்றை புறக்கணித்து விட்டது.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேலி பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்டு, ஹமாஸ் அமைப்பினரயும் சரணடைய செய்யும் வரை போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
ஹமாஸ் அமைப்பினரின் வசம் 136 பணய கைதிகள் இன்னும் உள்ளதாக கூறும் இஸ்ரேல், காசா முழுவதும் அவர்களை தேடி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒர் இடைக்கால போர்நிறுத்த திட்டத்தை முன்வைத்துள்ளது.
இதனை செயல்படுத்த பேச்சு வார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு அழைப்பு விடுத்தனர்.
இது குறித்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) தெரிவித்ததாவது:
அமைதிக்காக இஸ்ரேல் முன்மொழிந்துள்ள ஒரு திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். செயல்படுத்த கூடிய எந்த திட்டத்திற்கும் நாங்கள் தயார்.
இஸ்ரேல் வழங்கியுள்ள இத்திட்டத்தின்படி 6-வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதிக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், ஹமாஸ் கைதிகளை இஸ்ரேலும், பரஸ்பரம் விடுவிக்க வேண்டும்.
நிரந்தர போர்நிறுத்தத்திற்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம்; ஆனால், அதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.
இவ்வாறு ஹனியே கூறினார்.
கடந்த 2023 நவம்பர் இறுதியில் ஒரு-வார கால போர் நிறுத்தத்தில் சுமார் 105 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்ததும், இஸ்ரேலிய சிறைகளில் இருந்த 240 பயங்கரவாத குற்றவாளிகளை இஸ்ரேல் விடுவித்ததும் குறிப்பிடத்தக்கது.
- மருததுவ பணியாளர்கள் போல் இஸ்ரேல் ராணுவம் வேடமிட்டு நுழைந்தது
- கொல்லப்பட்ட 3 பேரும் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் தெரிவித்தது
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் அவர்கள் மறைந்திருக்கும் பகுதிகளை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரத்தில் உள்ளது, இப்ன் சினா (Ibn Sina) மருத்துவமனையில் பொது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போல் உடையணிந்த இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள், நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்றும் நோயாளிகள் போல் வேடமணிந்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்.
மருத்துவமனையின் 3-ஆம் தளத்திற்கு நேரடியாக விரைந்து சென்ற அவர்கள், அங்கு 3 சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்களை சுட்டு கொன்றனர்.
அந்த 3 பேரும் பாலஸ்தீன ராணுவத்தின் "ஜெனின் ப்ரிகேட்ஸ்" (Jenin Brigades) எனும் பிரிவை சேர்ந்தவர்கள் என ஹமாஸ் கூறியது.
ஆனால், கொல்லப்பட்ட 3 பேரும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்றும் அவர்களில் மொஹம்மெட் ஜலாம்னெஹ் எனும் முக்கிய பயங்கரவாதிக்கு குறி வைத்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் பாராட்டினார்.
இந்த அமைப்புடன் தொடர்பில்லாத இரு சகோதரர்களும் இந்த கமாண்டோ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் ராணுவ படையான அல் கசாம் ப்ரிகேட்ஸ் (Al Qassam Brigades) உயிரிழந்த மூவரும் வீர மரணம் அடைந்துள்ள உறுப்பினர்கள் என தெரிவித்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாலஸ்தீன சுகாதார துறை ஐ.நா.வின் பொதுச்சபை மற்றும் தன்னார்வல அமைப்பினர் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
- காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தல்.
- உலக நாடுகள் வலியுறுத்தலை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது இலக்கை எட்டும் வரை போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
25105 பேர் உயிரிழந்த நிலையில் 62681 பேர் காயம் அடைந்துள்ளனர். சனிக்கிழமையில் இருந்து தற்போது வரை 178 உடல்கள் காசாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா மீதான தாக்குதலில் இதுவரை 195 வீரர்களை இழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள 85 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். காசாவில் மொத்தம் 23 லட்சம் பேர் வசித்து வந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் பட்டினியால் வாடுவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அதன்பின் இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
- 132 பணய கைதிகள் ஹமாஸ் அமைப்பினர் வசம் இருப்பதாக இஸ்ரேல் கூறியது
- தகுந்த தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட இடங்களை ஆராய்கிறது இஸ்ரேல் ராணுவம்
பாலஸ்தீனத்தில், 100 நாட்களை கடந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வட காசாவில், இஸ்ரேலின் குண்டு வீச்சில் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் ஒரு இடுகாடு தகர்க்கப்பட்டது.
அக்டோபர் 7 அன்று 253 பேரை பணய கைதிகளாக கொண்டு சென்ற ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து சிலர் மீட்கப்பட்டாலும், 132 பேர் அவர்கள் வசம் உள்ளதாகவும், அவர்களில் 105 பேர் உயிருடன் இருப்பதாகவும், 27 பேர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.
அவர்களை தேடி காசா முழுவதும் சல்லடை போட்டு தேடி வரும் இஸ்ரேலிய ராணுவ படை, கான் யூனிஸ் இடுகாட்டில் உள்ள கல்லறைகளில் உடல்களை தோண்டி, தேடப்படும் பணய கைதிகளின் உடல்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது.
சர்வதேச சட்டங்களின்படி, போர் சூழலில் குறி வைத்து இடுகாட்டை தாக்குவது போர் குற்றமாக கருதப்படும். ஆனால், விதிவிலக்காக ராணுவ காரணங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததாவது:
பணய கைதிகளில், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இருந்தால் அவற்றை கண்டு பிடித்து, அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைப்பது போரின் நோக்கங்களில் ஒன்று.
உடல்கள் இருக்கலாம் என எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட இடங்களை நாங்கள் ஆராய்கிறோம்.
இடுகாட்டில் இருந்து அடையாளம் காண எடுக்கப்படும் உடல்கள், பாதுகாப்பான வேறொரு இடத்தில் தொழில்நுட்ப உதவியுடனும், இறந்தவர்களின் உடல்களுக்கு தரப்பட வேண்டிய மரியாதையுடனும் அடையாளம் காணப்படுகின்றன.
பணய கைதிகள் அல்லாதவர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்படுகின்றன.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை மிருகத்தனமாக கொன்று, பலரை ஹமாஸ் பணய கைதிகளாக கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இவ்வாறு கல்லறைகளில் தேடுதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இவ்வாறு இஸ்ரேல் கூறியது.
- காசா பகுதி தாக்குதலில் சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
- போர் தொடங்கி 100 நாட்கள் கடந்தும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடந்து வருகிறது.
பாலஸ்தீன காசா பகுதியில் தற்போது வரை 24,285 பேர் உயிரிழந்ததாகவும், 61,154 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.
தற்போதைய பாலஸ்தீன நிலவரம் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது:
காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பசியுடன் உள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் மேல் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் திண்டாடி வருகின்றனர். உணவுக்கும், நீருக்கும் அங்கே கடும் பஞ்சம் நிலவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 3,35,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் தவிக்கின்றனர். ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாக உருவாக போகின்றனர். காசாவில் எந்த இடமும் பாதுகப்பானதாக இல்லை எனும் நிலை அங்கு தோன்றி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் கத்தார் நாட்டுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.