என் மலர்
உலகம்
5 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபருடன் சந்திப்பு.. பிரதமர் மோடி கூறியது என்ன?
- இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இரு நாட்டு எல்லை பிரச்சினையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சீன அதிபரை சந்தித்த போது, இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதும், இருதரப்பு நம்பிக்கை தொடர்வதும் மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம். இந்தியா-சீனா உறவு நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்."
"எல்லையில் கடந்த நான்கு ஆண்டுகளில் எழுந்துள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை வரவேற்கிறோம். எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் நம் உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.