என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி?.. இந்து ராஷ்டிரத்தை வலியுறுத்தி வெடித்த கலவரம் - ஊரடங்கு அமல்!
    X

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி?.. இந்து ராஷ்டிரத்தை வலியுறுத்தி வெடித்த கலவரம் - ஊரடங்கு அமல்!

    • கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
    • நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.

    இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.

    காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

    பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

    மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.

    நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.


    தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    Next Story
    ×