என் மலர்
உலகம்
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம்- உலக தலைவர்கள் இரங்கல்
- முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார்.
- ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத்.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். இதனால் தனது பயணங்களையும் ரத்து செய்திருந்தார்.
கோடை காலத்தை கழிப்பதற்காக ஸ்காட்லாந்தின் பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்தவாறே சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரசையும் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதுமை தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுவந்த அவரை பால்மோரல் பண்ணை வீட்டிலேயே டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன்களான இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட், மகளும் இளவரசியுமான ஆன் ஆகியோர் பால்மோரல் விரைந்தனர். சார்லசின் மனைவி கமிலாவும் உடன் சென்றார்.
அதைப்போல சார்லசின் மகன் வில்லியமும் தனது பாட்டியை பார்ப்பதற்காக பால்மோரல் சென்றார். அதேநேரம் அவரது மனைவி கேத், தனது 3 குழந்தைகளை பார்ப்பதற்காக கென்சிங்டன் அரண்மனையிலேயே தங்கினார்.
ராணியின் உடல்நலக்குறைவுக்கு கவலை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், தனது எண்ணங்கள் அனைத்தும் ராணி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றியே இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் அமைதியாக பிரிந்தது. அந்த தகவலை லண்டன் பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது.
தகவல் அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் கடந்த 6-ந்தேதி பால்மோரல் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து தான் பிரதமராக தேர்வு பெற்றதை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை இங்கிலாந்து பிரதமராக ராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது இங்கிலாந்து ராணியாக பதவி ஏற்ற ராணி எலிசபெத், தனது பதவி காலத்தில் 17 பிரதமர்களை சந்தித்தவர் என்ற பெருமை பெற்றவர்.
இங்கிலாந்து ராணி மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.