என் மலர்
உலகம்
சாதனைகளின் மகாராணி இரண்டாம் எலிசபெத்
- ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார்.
- காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார். சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார். அதுபற்றிய ஒரு அலசல்:-
* ராணி இரண்டாம் எலிசபெத் உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை படைத்திருக்கிறார். அவர் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 70 ஆண்டுகள், 214 நாட்கள் அரசாட்சி நடத்தி இருப்பது அபூர்வ சாதனை.
* உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக, ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம், இங்கிலாந்தின் அதிகாரப்பகிர்வு, ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதில் இருந்து வெளியேறுதல் என பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
* ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார். 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது இவர் மட்டும்தான்.
* உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி இவர்தான் இவரது சொத்து மதிப்பு 370 மில்லியன் பவுண்ட், நமது பணமதிப்பில் சுமார் ரூ.3,441 கோடி ஆகும்.
* காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
* ஒன்றுக்கு மேற்பட்ட கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்து சாதனை படைத்திருக்கிறார். 1976-ல் மாண்டிரியால் ஒலிம்பிக் போட்டியையும், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியையும் இவர்தான் தொடங்கி வைத்தார்.
* இளவரசர் பிலிப்புடனான ராணி எலிசபெத்தின் திருமண வாழ்க்கை, பிலிப் மரணம் அடைகிற வரையில் 73 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது சாதனை.
* இங்கிலாந்து மன்னராக சார்லஸ் மகுடம் சூட 70 வருடங்கள், 214 நாட்கள் காக்க வைத்ததும் ஒரு சாதனை.
* வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. எல்லோருக்கும் பாஸ்போர்ட் வழங்கியவர் அவர். ஓட்டுனர் உரிமமும் அவரிடம் கிடையாது.
* ராணி இரண்டாம் எலிசபெத் தனது 89 வயதில் 2015-ம் ஆண்டு தனது வெளிநாட்டு பயணங்களை நிறுத்தும்வரையில், உலகம் முழுவதும் 42 முறை பயணம் செய்திருக்கிறார். மிக நீண்ட வெளிநாட்டு பயணத்தையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். 1953 நவம்பர் முதல் 1954 மே வரையில் 168 நாட்கள் 13 நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்துள்ளார்.
* ராணி எலிசபெத் மரணம் வரையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 கோடியே 11 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்திருப்பதும் சாதனையே.
* 1953-ல் ராணி எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட ஊர்வலத்தில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊர்வலம் 2 மைல் நீளம் கொண்டது. ராணியின் கிரீடத்தில் 1,333 வைரங்கள் பதித்திருப்பதும் சாதனை.
* ராணி எலிசபெத் 600 அறக்கட்டளைகளுக்கும், அமைப்புகளுக்கும் புரவலர்.
* 30 செல்ல நாய்களை ராணி எலிசபெத் வளர்த்திருக்கிறார். 18 வயதில் முதல் செல்ல நாய் சூசனை வைத்திருந்தார்.
சாதனைகளின் மகாராணியாக ராணி இரண்டாம் எலிசபெத் திகழ்ந்திருக்கிறார்.