என் மலர்
உலகம்
திரையில் மின்னிய ராணி எலிசபெத்
- 2006-ம் ஆண்டு, தி குயின் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ஸ்டீபன் பிரியர்ஸ் இயக்கத்தில், ராணியாக ஹெலன் மிர்ரன் நடித்திருந்தார்.
- 2012-ம் ஆண்டு வாக்கிங் தி டாக்ஸ் என்ற சின்னத்திரை படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத் வேடத்தில் எம்மா தாம்ப்சன் நடித்திருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது. அவரது வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டும் வகையில் இணையத்தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகியது உண்டு.
* தி குரோன் என்ற பெயரில் நெட்பிளிக்ஸ்சில் பீட்டர் மோர்க்கன் உருவாக்கி வெளியிட்ட நிகழ்ச்சி 4 சீசன்கள் தொடர்ந்தது. ராணியின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. இதில் முதல் 2 சீசன்களில் ராணி எலிசபெத் பாத்திரத்தில் கிளாரி போய்யும், எஞ்சிய 2 சீசன்களில் ஆஸ்கார் விருது வென்ற ஒலிவியா கோல்மனும் நடித்து இருந்தனர். 5-வது சீசன் வரும் நவம்பரில் தொடங்குகிறது. இதில் ராணி எலிசபெத்தாக இமெல்டா ஸ்டான்டன் நடிக்கிறார்.
* 2006-ம் ஆண்டு, தி குயின் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ஸ்டீபன் பிரியர்ஸ் இயக்கத்தில், ராணியாக ஹெலன் மிர்ரன் நடித்திருந்தார். இதில் இளவரசி டயானா மறைவுக்கு பிந்தைய நிகழ்வுகளும் இடம் பிடித்தன. இதில் ஹெலன் மிர்ரனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
* 2012-ம் ஆண்டு வாக்கிங் தி டாக்ஸ் என்ற சின்னத்திரை படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத் வேடத்தில் எம்மா தாம்ப்சன் நடித்திருந்தார்.
* 2015-ம் ஆண்டு 'எ ராயல் நைட் அவுட்' என்ற படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத்தாக கனடா நடிகை சாரா காடன் நடித்திருந்தார்.
பல அரச குடும்பங்களைப் பற்றிய படங்களிலும் ராணி எலிசபெத் பாத்திரம் இடம் பெற்றிருந்தது.
2010-ல் வெளியான தி கிங்ஸ் ஸ்பீச், 2004-ல் சர்ச்சில் தி ஹாலிவுட் இயர்ஸ், 1969-ம் ஆண்டு ராயல் பேமிலி, 2012-ல் தி மெஜஸ்டிக் லைப் ஆப் குயின் எலிசபெத், 2020-ல் எலிசபெத் அண்ட் மார்கரெட்: லவ் அண்ட் ராயல்டி, இந்த ஆண்டும்கூட எலிசபெத் போர்ட்ரெயிட் இன் பாரிஸ் என படங்கள் ராணி கதாபாத்திரத்துடன் வெளிவந்தன. இவையெல்லாமே நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, திரையிலும் ராணி எலிசபெத் மின்னியதைக் காட்டுகின்றன.