search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: அதிபர் ரணில் விக்ரமசிங்கே விருப்பம்
    X

    இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: அதிபர் ரணில் விக்ரமசிங்கே விருப்பம்

    • இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை.
    • எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது.

    கொழும்பு :

    இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினை தொடர் கதையாகவே நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக நேற்று அவர் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு விரும்புகிறேன். அப்படி தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே சர்வதேச நிதியத்தின் உதவியுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஏனெனில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது சர்வதேச நிதியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துகிறோம்.

    அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது. பெரும்பான்மை சிங்களர், தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களைப் பாதுகாத்து நாம் முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.

    நாட்டில் தற்போது பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் கூடுகிறது. அனைவரும் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்கின்றனர்.

    சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே நமது அடுத்த பணி. 2024-ம் ஆண்டுக்குள் தேவையான சட்டத்தை உருவாக்கி பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கூறி இருந்தார்.

    ஆனால் இதற்கு சிங்களர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அனைத்துக்கட்சி கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் விடுத்திருக்கும் அழைப்புக்கு சிங்கள கட்சிகள் செவிசாய்க்குமா என்பது போகப்போக தெரியும்.

    Next Story
    ×