என் மலர்
உலகம்

புதின்- டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு விரைவாக ஏற்பாடு செய்யப்படும்: ரஷியா

- அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
- உக்ரைன் மீதான ராணுவ உதவிக்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது மோதிக் கொண்டதால், அமெரிக்க உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளை நிறுத்தியது. அத்துடன உளவுத்துறை தகவல் பகிர்வதையும் நிறுத்தியது.
இந்த நிலையில்தான் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ரஷியா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இதற்கிடையே உக்ரைன் மீதான ராணுவ உதவிகள் மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு ஆகியவற்றிற்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்த நிலையில் புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பின் பிப்ரவரி 12-ந்தேதி புதின் உடன் டெலிபோனில் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இரு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை.