search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    திருமணத்திற்காக தாடி: நியூயார்க்கில் சீக்கிய போலீஸ்காரருக்கு அனுமதி மறுப்பு
    X

    திருமணத்திற்காக தாடி: நியூயார்க்கில் சீக்கிய போலீஸ்காரருக்கு அனுமதி மறுப்பு

    • நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்
    • ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது

    அமெரிக்காவில் காவல்துறையினரும் ராணுவத்தினரை போன்றே தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி 20-ம் நூற்றாண்டில் சட்டங்கள் கடுமையாக இருந்தன. இவற்றை மீறியவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி நேர்ந்தது.

    சமீப ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் சீக்கியர் ஒருவரை தனது தாடியை அதிகம் வளர்க்க அமெரிக்காவின் நியூயார்க் காவல்துறை அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    அமெரிக்காவில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது.

    சரன்ஜோத் டிவானா எனும் சீக்கியர் தனது திருமணத்திற்காக தனது தாடியை அரை அங்குலம் அதிகம் வளர்க்க முயன்றார். பாதுகாப்பு காரணங்களால் இதற்கான அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.

    "காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து நியூயார்க்கர்களும் தங்கள் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என நியூயார்க் மாநில ட்ரூப்பர்ஸ் பெனவலண்ட் அசோசியேஷன் எனும் காவலர் நலச்சங்க தலைவர் சார்லி மர்பி தெரிவித்துள்ளார்.

    சீக்கிய மத கோட்பாடுகளின்படி, ஆண்கள் கட்டாயம் தலைப்பாகை அணிய வேண்டும். அவர்கள் தங்கள் தலைமுடியையும் தாடியையும் எடுக்கக்கூடாது. ஆனால், நியூயார்க் காவல்துறையில் உள்ள ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

    "பணியாளர்களின் பன்முகத்தன்மையை மதிக்கிறோம். தலைப்பாகை அணிவது தொடர்பாக கொள்கை வகுக்க செயல்பட்டு வருகிறோம்", என காவல்துறை செய்தித்தொடர்பாளர் டியன்னா கோஹன் கூறினார்.

    2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், தாடி வைத்திருப்பதாலோ, தலைப்பாகை அணிவதாலோ சீக்கியர்களுக்கு கடற்படையில் சேருவதை தடுக்க கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×