என் மலர்
உலகம்

ஸ்லோவேனியாவில் முதல் பெண் அதிபர் தேர்வு

- நடாசா அடுத்த மாதம் 23-ந் தேதி அதிபராக பொறுப்பேற்பார்
- நடாசா டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு நெருக்கமானவர்.
லியுப்லியானா
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்ஷே லோகார் உள்பட 7 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் யாருக்கும் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் கிடைக்காத நிலையில் அன்ஷே லோகார் அதிக வாக்குகளுடன் முதல் இடத்தையும், அவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பளராக களம் இறங்கிய பெண் வக்கீலும், முன்னாள் பத்திரிகையாளருமான நடாசா பிர்க் முசார் 2-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் 2-வது சுற்று தேர்தல் நடந்தது. முதல் சுற்று தேர்தலில் நடாசா சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில் 2-வது சுற்று தேர்தலில் அவரை பிரதமர் ராபர்ட் கோலோப்பின் மத்திய இடதுசாரி கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரித்தன. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இதில் நடாசா 54 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் வெளியுறவு மந்திரியான அன்ஷே லோகார் 46 சதவீத வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இதன் மூலம் நடாசா ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வாகியுள்ளார். அவர் அடுத்த மாதம் 23-ந் தேதி அதிபராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 வயதான நடாசா அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.