search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • துணை கேப்டன் மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழுமையாக குணமடைந்துள்ளதாக பயிற்சியாளர் கூறினார்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், பீல்டிங் செய்தபோது ஸ்மிருதி மந்தனாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயம் குணமடையாததால், பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார்.

    இதுபற்றி பயிற்சியாளர் கனித்கர் கூறுகையில், 'ஸ்மிருதிக்கு விரலில் காயம் ஏற்பட்டு இன்னும் குணமடைந்து வருவதால், அவர் பெரும்பாலும் விளையாட மாட்டார். இது எலும்பு முறிவு அல்ல. எனவே, இரண்டாவது லீக் ஆட்டத்தில் இருந்து அவர் விளையாடுவார் என நம்புகிறோம்' என்றார்.

    மேலும், வெஸ்ட் இண்டீ1 மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின்போது ஏற்பட்ட தோள்பட்டை காயத்திலிருந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் பயிற்சியாளர் கூறினார். துணை கேப்டன் மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

    உலக கோப்பையில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா லீக் சுற்றில் மோத உள்ளது.

    • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
    • முதல் போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    கேப்டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

    இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் சமாரி

    அடப்பட்டு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். விஷ்மி குணரத்னே 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது சமாரி அடப்பட்டுக்கு வழங்கப்பட்டது.

    • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.
    • இந்திய பெண்கள் அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.

    கேப்டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.

    சமீபத்தில் முதலாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் படை மகுடம் சூடி வரலாறு படைத்தது. அதேபோன்று சீனியர் போட்டியிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

    உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8¼ கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.4¼ கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன.
    • இறுதிப் போட்டிக்கு பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறின.

    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்ல் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூசோவ் 56 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய பெர்ல் ராயல்ஸ் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இரண்டாவது அரையிறுதியில், ஜோபர் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிராம் அதிரடியாக ஆடி சதமடித்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய ஜோபர்க் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.

    • அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்சாரம் தடைபடுவதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகள் குளிக்காமலேயே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

    நீர்த்தேக்கங்கள் வறண்டுள்ள நிலையில், பம்பிங் ஸ்டேஷன்களுக்கும் மின்சாரம் கிடைக்காததால், ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியாவின் சில பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் குழாய்கள் வறண்டு காணப்படுகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக தற்காலிக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படுகின்றன.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் சாலையில் கற்கள் மற்றும் கழிவுகளை கொட்டி கண்டன முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தாமஸ் மபாசா கூறுகையில், 'தண்ணீர் கிடைக்காததால் எனது பிள்ளைகள் குளிக்காமல் பள்ளிக்கு செல்லவேண்டி உள்ளது. சில சமயங்களில் நடு இரவில் தண்ணீர் வந்தால், குழந்தைகளை எழுப்பி குளிக்க வைக்கலாம் என்று காத்திருப்போம்' என்றார்.

    • இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.அதிரடியாக ஆடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஈஸ்ட் லண்டன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது.

    ஈஸ்ட் லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் டியோல் 46 ரன்னும் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • ஜூனியர் டி20 உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய இளம் படை அறிமுக உலக கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பையை கைப்பற்றி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்தார். ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வெற்றியைக் கொண்டாடும் வகையில் வரும் 1-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

    • 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
    • இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது.

    புளோம்பாண்டீன்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர்.

    343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 58 ரன்னும், மார்கோ ஜேன்சன் 32 ரன்னும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பவுமாக்கு வழங்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கிறது.

    • முதல் அரையிறுதியில் இந்தியாவும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தும் வென்றது.
    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும், திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டு வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய இங்கிலாந்து 19.5 ஓவரில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    https://www.dailythanthi.com/Sports/Cricket/india-england-clash-in-junior-womens-20-over-world-cup-cricket-final-today-888357

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 99 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 96 ரன்னில் சுருண்டது.

    போப்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    அதன்பின் ஆடிய ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவரில் 96 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 298 ரன் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 271 ரன் மட்டுமே எடுத்தது.

    கேப் டவுன்:

    இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்தின் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி சதடித்தார். அவர் 113 ரன்னில் அவுட்டானார். டேவிட் மலான் 59 ரன் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 27 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நூர்ஜே 4 விக்கெட்டும், சிசந்த மகளா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • பெண்கள் ஜூனியர் உலக கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
    • இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.

    கேப் டவுன்:

    19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தலையிலான இந்திய அணி கலந்து கொண்டு ஆடி வருகிறது.

    குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா அணிகளும், குரூப் சி பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இதிலிருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, யுஏஇ, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் 6 சுற்றின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    ×