என் மலர்
ஸ்பெயின்
- ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடர் லா லிகா
- தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
உலக அளவில் அதிக பேர் விரும்பி பார்க்கும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளில் கால்பந்து விளையாட்டிற்கு லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் தமிழ் ரசிகர் ஒருவர் பின்னணி பாடலாக தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில், லியோ படத்தின் 'Badass' பாடலுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ பதிவிடப்பட்டதால் தமிழ் கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- நாளை முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
பாரிஸ்:
ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி நாளை (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 12 நாடுகள் விளையாடுகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
ஏ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், போட்டியை நடத்தும் பிரான்ஸ் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை நாளை எதிர் கொள்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. பாரீஸ் ஒலிம்பிக்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
- 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
கி.மு.776-ம் ஆண்டு முதலாவது ஒலிம்பிக் போட்டி கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் நடந்தது. பின்னர் கிரேக்க மன்னர் தியோடோசியஸ் இநத ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார்.
நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
முதல் உலகப்போர் காரணமாக 1916-ம் ஆண்டும், 2-வது உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1944-ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப் பட்டது. கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் யாருமே அனுமதிக்கப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை (26-ந் தேதி) கோலாகலமாக தொடங்கு கிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. 3-வது முறை யாக பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையில் வீரர்கள், வீராங் கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டி நடைபெறுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா சீனா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 592 பேரையும், சீனா 388 பேரையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள். பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் பிரான்ஸ் இந்த முறை அதிகமான பதக்கங்களை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் ஆக மொத்தம் 113 பதக்கத்தை குவித்து முதல் இடத்தை பிடித்தது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 89 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.
இதில் தடகளம் (நீரஜ் சோப்ரா) , பேட்மின்டன் (பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி) , பளு தூக்குதல் (மீராபாய், சானு), குத்துச்சண்டை (லவ்லினா), ஆக்கி, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்க மும், மீரா பாய் சானு (பளு தூக்குதல்) ரவி குமார் தகியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். இந்தப் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்க பதக்க ஆர்வத்துடன் இருக்கிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் "எல்லோருக்கும் வாய்ப்பு" என்பதாகும்.
- பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி.
- ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பார்சிலோனா:
மனித உடலின் மேல் சில மணி நேரமாவது சூரிய ஒளி படவேண்டும். அப்பொழுது தான் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும் என கூறுவார்கள்.
ஆனால் ஸ்பெயினின் பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற 11 வயது சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி. இதனால் அவர் தன் உடலின் மேல் சூரிய ஒளி படாத வகையில் முக கவசம் மற்றும் ஆடைகளை அணிந்தே வெளியில் சென்று வருகிறார்.
மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே வரும் ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் (xeroderma pigmentosum) என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தோல் புற்றுநோயால் எளிதில் உருவாகக் கூடும். கடுமையான வெடிப்பு, வறண்ட சருமம் மற்றும் தோல் நிறமியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் நோயின் அறிகுறிகளாகும். மேலும் காது கேளாமை, வலிப்பு மற்றும் கண்புரை ஆகியவற்றிற்கும் இது வழிவகுக்கும்.
இதுதொடர்பாக, பால் டாமிங்கஸ் கூறுகையில், நான் பகலில் வெளியே செல்வேன். அதற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். நீண்ட சட்டை, தொப்பிகள், கண் கண்ணாடி மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
எப்போதும் முக கவசம் உள்பட நீண்ட சட்டை அணிந்து செல்லும் சிறுவனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
- 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
- ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.
இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.
ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.
- தொலைந்து போன பொம்மையை கண்டுபிடிக்க உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தார்.
- ஒரு துப்புரவுத் தொழிலாளி பொம்மையைக் கண்டுபிடித்து அவரிடம் திருப்பித் தந்தார்.
மிகவும் பிரபலமான நகைச்சுவை தொடரான 'மிஸ்டர் பீன்'-ஐ யாராலும் மறக்க முடியாது. வசனம் மற்றும் கதாபாத்திரங்கள் அதிகளவில் இல்லாவிட்டாலும் அட்கின்சன் என்பவரும் அவருடன் வரும் பொம்மையை மையமாக வைத்தே நகைச்சுவை தொடர் எடுக்கப்பட்டிருக்கும். அதில் அட்கின்சன் எங்கு சென்றாலும் கூடவே பொம்மையை எடுத்து செல்வார். அதனுடன் பேசுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்போது 'மிஸ்டர் பீன்'னை ஒட்டி நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 9-ந்தேதி ஸ்பெயினில் பார்சிலோனா மெட்ரோவில் பயணித்த சீன நபர் தனது குழந்தை பருவ பொம்மையான "ரொட்டி" காணாமல் போனதை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் அந்த பொம்மை கிடைக்காததால் தொலைந்து போன பொம்மையை கண்டுபிடிக்க உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தார். மேலும் பொம்மை "ரொட்டி"யின் புகைப்படத்துடன் அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 500 யூரோக்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,637) வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். 'ரொட்டி'யை கண்டுபிடிக்க தனது பணிகளை ரத்து செய்துவிட்டு தேட தொடங்கினார்.
சில நாட்களுக்கு பிறகு, சாக்ரடா ஃபேமிலியா மெட்ரோ நிலையத்தில் ஒரு துப்புரவுத் தொழிலாளி பொம்மையைக் கண்டுபிடித்து அவரிடம் திருப்பித் தந்தார். ரொட்டியுடன் மீண்டும் இணைந்த பிறகு, துப்புரவு பணியாளருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். "பலருக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் எனது வேலை, எனது பட்டம் அல்லது எனது உடைமைகளை விட எனக்கு ரொட்டி முக்கியமானது" என்று சீன நபர் கூறியுள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 1-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.
- இந்த சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ஸ்பெயின் வீரர் நடால் விலகி உள்ளார்.
மாட்ரிட்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.
இதற்கிடையே, விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது.
இந்நிலையில், விம்பிள்டன் போட்டியில் இந்த முறை விளையாடப் போவதில்லை என முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபெல் நடால் அறிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
- காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்
- தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார்
ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் நேற்று இரவு நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி காமெடியனின் முகத்தில் நபர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேமி கரவாகா என்ற ஸ்டான்ட் அப் காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில், காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு ஆல்பர்டோவின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ நேராக விறுவிறு என மேடைக்கு சென்று காமெடியன் ஜேமியின் முகத்தில் ஒரு குத்து வைத்து அவரை நிலைகுலையச் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஜேமி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆல்பெர்ட்டோ ஜேமியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் தெருக்களில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
- இருவரும் தங்களது நடன பாணிகளில் அசத்திய வீடியோ பயனர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் வெளிவந்தாலும் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களிடம் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாடலுக்கு 2 பெண்கள் இரண்டு விதமான நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
அந்த வீடியோவில், பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் நெட்பிக்ஸ் தொடரான 'ஹீரமண்டி தி டயமண்ட் பஜார்'-ல் இடம்பெற்ற 'சகல் பான்' என்ற பாடலுக்கு 2 பெண்கள் நடனம் ஆடுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் தெருக்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அதில், பூர்ணதா மொகந்தி என்ற பெண் அழகான சாம்பல்- இளஞ்சிவப்பு சேலை அணிந்து சகல் பான் பாடலுக்கு ஒடிசி நடனம் ஆடுகிறார். மற்றொரு பெண்ணான வினிதா ஸ்ரீராம் குமார், வயலட்- தங்க நிற புடவை அணிந்து அதே பாடலுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்.
இருவரும் தங்களது நடன பாணிகளில் அசத்திய வீடியோ பயனர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார். இன்று இரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெத்வதேவ் செக் வீரர் ஜிரி லெஹ்காவை சந்திக்கிறார்.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான சின்னர் காலிறுதியில் இருந்து திடீரென விலகினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில் நம்பர் 2 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடா வீரர் பெலிக்ஸ் அகருடன் மோத இருந்தார். அப்போது இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சின்னர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
- இதில் நம்பர் 2 வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை மீரா ஆன்ட்ரிவாவை எதிர்கொண்டார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், நம்பர் 4 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, சக வீராங்கனையான யூலியா புதின்சேவாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.