search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. வாக்குறுதியை நிறைவேற்றியதாக அமெரிக்கா பெருமிதம்
    X

    பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. வாக்குறுதியை நிறைவேற்றியதாக அமெரிக்கா பெருமிதம்

    • 195 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க வளைகுடாவில் தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர், இது அவர்களின் உண்மையான திட்டத்தை விட 278 நாட்கள் அதிகம் ஆகும். அவர்களின் பயணம் முழுவதும், அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி வந்து 121 மில்லியன் மைல்கள் (195 மில்லியன் கிலோமீட்டர்) தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.

    "வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி செய்து முடிக்கப்பட்டது: ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி!" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து (ISS) இரண்டு விண்வெளி வீரர்களை மீட்டெடுக்க எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்-இடம் கூறியதாகக் தெரிவித்து இருந்தார்.

    சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இரு நாசா விண்வெளி வீரர்களும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3:27 மணி அளவில் புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினர்.



    Next Story
    ×