என் மலர்
உலகம்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் சந்திப்பு- டிரம்ப்

- அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
- நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் தொலைபேசியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதனுடன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். அப்போது அவர்கள் உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக ரஷிய அதிபர் புதினை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உக்ரைனில் சண்டையை நிறுத்த உண்மையிலேயே புதின் விரும்புகிறார் என நான் நம்புகிறேன். இதை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். புதினை விரைவில் சந்திக்க இருக்கிறேன். இதற்கான நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது விரைவில் நடக்கலாம்.
இது தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் அமெரிக்க குழுவினர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். இந்த சந்திப்பில் அவரும் கலந்து கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்த சூழ்நிலையில் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இதனால் போர் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.