என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் குர்பாஸ் 89 ரன்னில் அவுட்டானார்.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி, பெலுக்வாயோ, நபா பீட்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினர்.
டோனி சோர்சி 26 ரன்னும், பவுமா 22 ரன்னும், ஹென்ரிக் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்கிரம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. மார்கிரம் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆனாலும், ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குர்பாசுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் குர்பாஸ் சதமடித்து அசத்தினார்.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 105 ரன்னும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தனர்.
பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.
- ஆணையத்தின் செயலி மற்றும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
அபுதாபி:
அமீரக இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 12 வயதை அடைந்தவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும்.
முதல் முறையாக ஹஜ் பயணம் செய்ய இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ஆணையத்தின் செயலி மற்றும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அடுத்த ஆண்டு அமீரகத்தை சேர்ந்த 6 ஆயிரத்து 228 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவில் வெளியேறினர். 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டும், காசன்ஃபர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குல்பதீன் நயீப் 34 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 25 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- பொதுவாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மெய்நிகர் ஆட்டிச குறைபாடு தொடர்பான அறிகுறிகளுடன் கூடிய அபாயத்தில் உள்ளனர்.
- கவனம், மொழி மற்றும் சமூக திறன்களுக்கு பொறுப்பான மூளை பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
துபாய்:
அமீரகத்தில் அதிக நேரம் டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு மெய்நிகர் ஆட்டிச குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா? என்பதற்கு அமீரகத்தில் உள்ள நிபுணர்கள் எச்சரிக்கை விளக்கம் விடுத்துள்ளனர்.
இது குறித்து அமீரகத்தின் நல்வாழ்வு பயிற்சியாளர் புஸ்ரா கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமீரகத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் ஆரம்ப வயதில் இருந்தே டேப்லெட், செல்போன் அல்லது டி.வி போன்ற திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மெய்நிகர் ஆட்டிச பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக ஆட்டிசம் என்பது மரபணுவியல் அல்லது நரம்பியல் சார்ந்த குறைபாடு ஆகும். இதில் மனவளர்ச்சி குன்றிய நிலை அல்லது வயதுக்கு ஏற்ற மனவளர்ச்சி இல்லாமல் காணப்படும்.
மெய்நிகர் ஆட்டிசம் என்பது சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடைய பாதிப்பாகும். குறிப்பாக இது நிஜ உலக தொடர்பு இல்லாதது என கூறலாம். இது டிஜிட்டல் திரைகளில் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
பொதுவாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மெய்நிகர் ஆட்டிச குறைபாடு தொடர்பான அறிகுறிகளுடன் கூடிய அபாயத்தில் உள்ளனர். இந்த வயதுதான் மூளை வளர்ச்சியடையும் பருவமாகும். இதில்தான் சமூகம் மற்றும் மொழி சார்ந்த திறன்களை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. இந்த திறன்கள் அதிகப்படியாக டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு குறையும்.
கவனம், மொழி மற்றும் சமூக திறன்களுக்கு பொறுப்பான மூளை பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. திரைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு பேச்சில் தாமதம், குறைவான கவனம் செலுத்துதல் மற்றும் நிஜ உலக சமூகத்தினரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் நரம்பியல் நிபுணர் டாக்டர் அலெஸ்சாண்ட்ரே மச்சாடோ கூறியதாவது:-
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடத்தைகளை பொறுத்தவரையில் பேசுவதில் தாமதம் மற்றும் நிலையான கண் தொடர்பு இல்லாதது போன்றவைகள் ஏற்படுகிறது. அதிக நேரம் திரையில் செலவிட்டால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை.
இதற்கு மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுகிறது. ஆனால் ஆரம்ப வயது மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் டிஜிட்டல் திரையில் அதிக நேரத்தை செலவிட்டால் கவனம், நினைவுத்திறன் மற்றும் சமூக திறன்களில் ஏற்படும் பாதிப்புக்கு வழி வகுக்கும். இது குறித்த அறிகுறிகளை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக கண்பார்த்து நிலையாக பேசமுடியாமை, தாமதமான பேச்சு, மற்றவர்களிடம் தொடர்புகொள்வதில் ஆர்வமின்மை, திரும்ப திரும்ப ஒரே செயலை செய்தல், திரைகளில் செலவிட வேண்டும் என்ற பிடிவாதம், அதனை நிறுத்த கூறினால் அடம் பிடித்து அழுவது போன்ற அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். அதிலும் தனிமையாக இருப்பது, தகவல் தொடர்பில் சிரமம் போன்றவற்றை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். டிஜிட்டல் திரையில் கணிசமாக நேரத்தை செலவிடுவதை குறைப்பது குழந்தைகளின் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதிக்கு கார் மூலம் செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும்.
- வெளிநாடுகளில் இருந்து வரும் அல்லது இங்கிருந்து வெளிநாடு செல்லும் விமான பயணிகளுக்கு மின்சார விமான டாக்சி காத்திருப்பு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
துபாய்:
துபாயில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பல்வேறு குட்டி விமான நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் மின்சாரத்தில் இயங்கும் விமான டாக்சிகளை அமீரகத்தில் இயக்க அமெரிக்காவின் ஜோபி ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அபிதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள மின்சார விமான டாக்சிகள் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதி வரை இயக்கப்பட உள்ளது.
பொதுவாக துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதிக்கு கார் மூலம் செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். இனி இந்த மின்சார விமான டாக்சி இயக்கப்பட்டால் வெறும் 10 நிமிடங்களில் இரு பகுதிகளுக்கும் சென்று வரலாம். இந்த மின்சார விமான டாக்சிகள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. மின்சாரத்தால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகை போன்ற நச்சு வாயுக்கள் இதில் வெளிவருவது இல்லை.
இதனை எளிதில் குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏற்றி விட முடியும். வருகிற 2026-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் சேவைக்காக இந்த டாக்சிகள் இயக்கப்படும் என சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு (2025) வெள்ளோட்டம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் மொத்தம் 6 மின்சார விமான டாக்சிகள் இயக்கப்பட உள்ளது. இதில் பைலட் அமர்ந்து 4 பயணிகள் பயணம் செய்யும் வகையில் வசதி செய்து தரப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் அல்லது இங்கிருந்து வெளிநாடு செல்லும் விமான பயணிகளுக்கு இந்த மின்சார விமான டாக்சி காத்திருப்பு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
இந்த நிலையில் நடப்பு வாரம் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த வான்வழி போக்குவரத்து மாநாட்டில் ஜோபி ஏவியேஷன் அமெரிக்க நிறுவனத்தின் நிறுவனர் ஜோபென் பெவிர்ட் அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் சைப் முகம்மது அல் சுவைதியை சந்தித்து அமீரகத்தில் மின்சார விமான டாக்சிகளை இயக்குவதற்கான சான்றிதழுக்கான விண்ணப்பத்தை நேரில் அளித்தார்.
இந்த ஏர் ஆபரேடர் என்ற சான்றிதழ் அந்த ஆணையத்தின் சார்பில் வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு தேவைப்படும் ஆவணமாகும். இதனை தொடர்ந்து அமீரகத்தில் மின்சார விமான டாக்சியை இயக்க விண்ணப்பித்த முதல் நிறுவனம் என்ற பெயரை இந்த அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளது.
- டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் பாரிசில் கைது செய்யப்பட்டார்.
- இந்த கைதுக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அபுதாபி:
உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.
செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இந்தக் கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டியம் இருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
அபுதாபியில் பிரெஞ்சு கடற்படை தளம் இயங்கி வருகிறது. அதேசமயம், பிரான்சிடமிருந்து லெக்லெர்க் டாங்கிகள் மற்றும் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயன்படுத்தி வருகிறது. மேலும் சில போர் விமானங்களை வாங்க யுஏஇ அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. துரோவ் கைது எதிரொலியால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக யு.ஏ.இ. அறிவித்துள்ளது.
- அக்டோபர் 3 முதல் 20 வரை 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது.
- இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது.
மும்பை:
20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருந்தது.
இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது. இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.
- பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை சேகரித்து வருகிறேன்.
- பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்.
அபுதாபி:
அபுதாபியில் வசிக்கும் அமீரகத்தை சேர்ந்த ராஷித் யூசுப் அல் ஹம்மாதி தனது வீட்டையே அருங்காட்சியகமாக மாற்றி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அபுதாபியின் அல் பலா பகுதியில் உள்ள எனது வீட்டில் பாரம்பரிய பொருட்களை சேகரித்து அருங்காட்சியமாக மாற்றியுள்ளேன். இந்த அருங்காட்சியகம் மறைந்த அமீரகத்தின் நிறுவன அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனது தந்தை ஷேக் ஜாயித் கூறிய பல்வேறு கருத்துகள் குறித்து அடிக்கடி நினைவுகூர்வார்.
இதன் அடிப்படையில் பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை சேகரித்து வருகிறேன். தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய பொருட்கள் இங்கு உள்ளன. இதில் 1923-ம் ஆண்டை சேர்ந்த கார் உள்ளிட்ட 17 பழங்கால கார்கள், 100 ஆண்டு பழமையான புத்தகம், பாஸ்போர்ட், தொலைக்காட்சி, வாசனை திரவிய வகைகள், பாரம்பரிய வீடுகளின் டிசைன்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அபுதாபியில் உள்ள பிரதான சாலைக்கு இந்திய டாக்டர் மேத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- அபுதாபி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் என்ற பெயரை பெற்றார்.
அபுதாபி:
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்தவர் டாக்டர் ஜார்ஜ் மேத்யூ (84). இவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 1967-ம் ஆண்டு தனது 27-வது வயதில் முதல் முறையாக நாடு ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் வருகை புரிந்தார். அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் என்ற பெயரை பெற்றார்.
தொடர்ந்து, அமீரகத்தில் மருத்துவத் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய அவர் கடந்த 1972-வது ஆண்டில் அல் அய்ன் பகுதியின் மருத்துவ இயக்குனராக பணியாற்றினார்.
மருத்துவ பணியில் இவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக கடந்த 2004-ம் ஆண்டு இவரது குடும்பத்துக்கு அமீரக அரசு குடியுரிமை வழங்கியது. இதையடுத்து, அபுதாபி விருதை கடந்த 2018-ம் ஆண்டு பெற்றார்.
இந்நிலையில், அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ அளித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அபுதாபி மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அல் மப்ரக் பகுதியில் ஷேக் ஷேக்கபுத் மருத்துவ நகரம் அருகில் உள்ள சாலைக்கு டாக்டர் ஜார்ஜ் மேத்யூ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் மேத்யூ செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது பெருமையடைய வைத்துள்ளது. எனது சேவைகளுக்காக அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானிடம் விருது பெற்றேன். நான் வாழும் வரை அமீரகத்திற்காகவும், அதன் குடிமக்களுக்காகவும் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். இறைவன் எனக்கு சேவை செய்ய அதிக நேரத்தை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.
- ஒரே நேரத்தில் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக ஒரு தரப்பில் கூறப்பட்டாலும் அப்படியெல்லாம் இல்லை பாசம் தான் என்றைக்குமே என்ற வகையில் ஒரு சம்பவம் அபுதாபியில் நிகழ்ந்துள்ளது.
அரிய வகையால் நோயால் பாதிக்கப்பட்டு முதல் குழந்தை உயிரிழந்த நிலையில், இரண்டாவது குழந்தைக்கும் அதே நிலை ஏற்பட்டபோது உறைந்து போன தந்தை செய்த செயலால் அக்குழந்தை இன்று மகிழ்ச்சியில் உள்ளது என்றால் அதற்கு ஈடுஇணை இல்லை...
அபுதாபியில் 14 ஆண்டுகளாக வசித்து வருபவர் இம்ரான் கான். இந்தியரான இவருடைய 4 வயது மகள் ரசியா, குழந்தைப் பருவத்தில் தோன்றும் 'பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3' என்ற கல்லீரலை தாக்கும் அரியநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், உறைந்து போன இம்ரான் கான், சிறுமியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு அறுவைசிகிச்சைக்கு 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 27 லட்சம்) செலவாகும் என கூறப்பட்டது.
முன்னதாக, இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நோயால் தங்கள் முதல் மகளை இழந்ததால், 2-வது மகளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று இம்ரான் கான் முடிவு செய்தார். இதற்காக அமீரக அரசின் தொண்டு அமைப்பான எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட்டைத் தொடர்புகொண்டு உதவி கேட்டார்.
இம்ரான் கானின் நிலையை கண்ட தனியார் மருத்துவமனையும் தங்களது பங்களிப்புக்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. அடுத்ததாக, கல்லீரல் தானம் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கல்லீரல் தானம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிறுமியின் தந்தையான இம்ரான் கானே மகளுக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தார்.
இதையடுத்து, அபுதாபியில் உள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டியில் (பிஎம்சி) பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ரெஹான் சைஃப் தலைமையிலான மாற்று அறுவை சிகிச்சை குழு, கடந்த புதன்கிழமை அன்று சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தனர்.
ஒரே நேரத்தில் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தது. இதன் பின் சிறுமியின் உயிருக்கு பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் ரெஹான் சைஃப் கூறுகையில், "ரசியாவை தாக்கிய நோய் மரபணு மாற்றத்தால் ஏற்படுவதாகும். இந்த நோய் உலகில் லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இது பித்த சுரப்பு மூலம் அசாதாரண நிலைக்கு வழிவகுக்கிறது. இறுதியில் கல்லீரலை சேதப்படுத்துகிறது. இது, குழந்தை பருவத்தில் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகளாக வெளிப்படுகிறது.
இதனால், காது கேளாமை, வயிற்றுப்போக்கு மற்றும் கணையத்தில் வீக்கம் காணப்படும். இதில் வெற்றிபெற்றது நாட்டின் சுகாதாரத்துறைக்கு ஒரு மைல்கல். இது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மருத்துவச் சமூகத்திற்கு ஒரு மகத்தான சாதனை. ரசியா இனி பள்ளிக்குச் சுதந்திரமாகப் போக முடியும். எல்லாக் குழந்தைகளைப் போலவே அவராலும் இயல்பாக வாழ முடியும்" என கூறினார்.
மகளின் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு பேசிய தந்தை இம்ரான் கான், "எனது மகளின் கண் நோயால் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போதுதான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். இனி, ஆபத்தில்லை" என கண்ணீர்மலகக் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
+2
- அபுதாபி இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் திறந்து வைத்தார்.
- அங்கு நிறுவப்பட்ட சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
அபுதாபி:
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து துபாய்–அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55,000 சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
இதற்கிடையே, அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் திறந்துவைத்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள கடவுள் சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
இந்நிலையில், அபுதாபி இந்து கோவிலுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலுக்குச் சென்றதில் ஆசிர்வதிக்கப்பட்டேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்புறவின் புலப்படும் சின்னமாக இது உலகிற்கு ஒரு நேர்மறையான செய்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோவில் இரு நாடுகளுக்கு இடையே ஓர் உண்மையான கலாசார பாலமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.