search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.
    • விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூ யார்க் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது. ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.

    விமானம் புறப்பட தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் டேக் ஆஃப் ஆவது ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹூஸ்டன் தீயணைப்புத் துறை (HFD) தெரிவித்துள்ளது.

    "விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆகும் முன் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் தீயணைப்பு துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை," என்று ஹூஸ்டன் தீயணைப்பு துறை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் அரங்கேறிய நிலையில், இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளில் சிலர் தீப்பிழம்புகளைக் கண்டதும் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் அரங்கேறிய விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    • தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
    • செலினா கோம்ஸ்-க்கு துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான்

    கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவற்றை நாடு கடத்தி வருகிறார். கொலம்பியா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதற்கட்டமாக நாடுகடத்தப்பட்டனர்.

    கைவிலங்கிட்டு, குடிக்க தண்ணீர் இல்லாமல், விமானத்தில் ஏசி இல்லாமல் அவர்களை அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியதாக பிரேசில் குற்றம்சாட்டியது. இதற்கிடையே நாடு முழுவதும் குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாதோரை தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மெக்சிகோ மற்றும் இத்தாலி வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

    சில மணி நேரங்களிலேயே அதை அவர் நீக்கினார். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.

    சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 நபர்களுடைய தாய்மார்களின் வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது. கெய்லா ஹாமில்டன், ஜோஸ்லின் நுங்கரே மற்றும் ரேச்சல் மோர் ஆகியோரின் பிள்ளைகள் சட்டவிரோத 'ஏலியன்'களால் கொல்லப்பட்டனர்.

    செலினா கோம்ஸ்-க்கும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கும் இந்த துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான் என்று இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்நதுள்ளது.

    அதில் பேசும் அவர்கள், 'நீங்கள் [செலினா கோம்ஸ்] யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோத குடியேறிகளால் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில். அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே' என்று தெரிவித்தனர்.

    மேலும் செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.

    • அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது என் கடமை.

    கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இறக்குமதி வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

    "இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது."

    "நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது.
    • ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    அமெரிக்கா-வெனிசுலா நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது.

    இதில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை தென் அமெரிக்க நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புப் தூதர் ரிச்சர்ட் கிரெனெல் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் 6 அமெரிக்க பிணைக்கைதிகளை வெனிசுலா அரசு விடுதலை செய்துள்ளது. இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    • விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
    • உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

    அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்றிரவு சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

    பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் - விமானம் மோதி 67 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த ஓரிரு தினங்களில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.



    • அமெரிக்க சில தினங்களுக்கு முன் டீப்சீக் ஏ.ஐ. மாடலை வெளியிட்டது.
    • அமெரிக்காவுக்கு டீப்சீக் கடும் சவாலாக இருக்கும் என கணிப்பு.

    அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ.-க்கு சவால் விடும் வகையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக் ஏ.ஐ. மாடலை வெளியிட்டது. டீப்சீக் மாடல் இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளது. அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை. சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாடலுக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.
    • அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும்

    அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

    அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும். இந்நாடுகளுக்கு பொதுவான நாணயம் இல்லை.

    இதற்கிடையே உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக ரஷியா பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.

    பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்தியேக நாணயம் உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள டிரம்ப்,

    பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை நாம் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது.

    இந்த விரோத நாடுகளிடமிருந்து ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ, வலிமைமிக்க அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உத்தரவாதம் வந்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.

    மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும். அவர்களின் உத்தரவாதத்தை நாங்கள் கோரப் போகிறோம்.

    அவர்கள் மற்றொரு முட்டாள் நாட்டைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்றும் வாய்ப்பு இல்லை. அவ்வாறு முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளை எதிர்நோக்க சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நட்பை இழக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

    • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
    • விண்வெளி வீரர்களை அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

    வாஷிங்டன்:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

    அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ஸ்பேஸ் வாக் செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். மிகுந்த பாதுகாப்புடன் 9வது முறையாக நடந்த ஸ்பேஸ்வாக் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன.

    ஸ்பேஸ் வாக்கில் சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களைக் கழித்துள்ளார். சாதனை படைத்த சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார்.
    • பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால் திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    அங்குள்ள விர்ஜினீயா பகுதியை சேர்ந்த ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார். அவ்வாறு அவர் புத்தாண்டையொட்டி வாங்கிய டிக்கெட் ஒன்றை வீட்டில் உள்ள தனது பைபிளில் மறைத்து வைத்திருந்தார். அதன்பிறகு வழக்கம் போல் வேலைகளுக்கு சென்று வந்த நிலையில், சமீபத்தில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

    அப்போது தான் அவருக்கு தான் வாங்கிய லாட்டரி டிக்கெட் பற்றி ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக அவர் பைபிளில் மறைத்து வைத்திருந்த லாட்டரியை எடுத்து பார்த்த போது, அவர் வாங்கியிருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஜாக்பாட் பரிசு பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    • எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
    • இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க முன்வந்த விவகாரம் நகைச்சுவை இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய நலனாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கலாம் என்று மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்தார். தி மெக்கின் கெல்லி நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார், கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

    "இது ஒன்றும் ஜோக் இல்லை. இது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக கையகப்படுத்தும் விஷயம் இல்லை. இது நம் தேசிய நலனுக்கானது. இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இது அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி தந்திரமாக கையாள வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆர்க்டிக் பகுதி எங்கள் கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்," என்று தெரிவித்தார்.

    ஆர்க்டிக் பகுதி அமெரிக்கா பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய கப்பல் போக்குவரத்து தளமாக உருவெடுக்கும். சீனா இந்த பகுதியில் தனது இருப்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என்று ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வடமேற்கு கிரீன்லாந்தில் நிரந்தர ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டென்மார்க்-இடம் இருந்து சுதந்திரம் பெற முயற்சித்து வரும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், தங்களது தீவு விற்பனைக்கு அல்ல என்றும், மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

    • அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மற்ற உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் நடு வானில் ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த புதன்கிழமை இரவு தலைநகர் வாஷிங்டனில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.

    ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இந்த விபத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமாவே காரணம் என தற்போதைய அதிபர் டொனல்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

    விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று [வியாழக்கிழமை] செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.

    அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 இல் நான் அதிபரானபோது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.

    ஆனால் 2020 இல் ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார். இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.
    • டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது.

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

    ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அதோடு வன்முறையை தூண்டும் வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

    இதன் விளைவாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.

    இதனால் கோபமடைந்த டிரம்ப், தன் மீது அவதூறு சுமத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியதாக கூறி மெட்டா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி ஆகியுள்ள டிரம்ப், கடந்த காலங்களில் தன்னை விமர்சித்தவர்கள் மற்றும் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

    இதனிடையே மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தொழிலை சுமூகமாக நடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.

    இதன்காரணமாக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி வழக்கை முடித்துக் கொள்ள டிரம்புக்கு 25 மில்லியன் டாலர் (ரூ.216 கோடி) வழங்குவதாக மெட்டா நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    ×