search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பெய்ரூட் காசாவாக மாறும்... ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்த நேதன்யாகு
    X

    பெய்ரூட் காசாவாக மாறும்... ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்த நேதன்யாகு

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    Next Story
    ×