என் மலர்
உலகம்

நிதி உதவியை நிறுத்திய விவகாரம்: இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது- டொனால்டு டிரம்ப்

- உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
- இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்?
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை.
எங்களைப் பொறுத்த வரை உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்? அங்கு வாக்குப்பதிவுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அமெரிக்கர்களின் வரி பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆட்டோ மொபைல், செமிகண்டக்டர், மருந்து இறக்குமதிகளுக்கு சுமார் 25 சதவீத வரி விதிக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.