என் மலர்
புதுச்சேரி
ரவுடி கொலையில் 8 பேர் கைது
- ஆட்டோ ஸ்டாண்டில் யார் பெரியவர் என அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- கொலை தொடர்பாக உருளையன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை கோவிந்த சாலையை சேர்ந்தவர் பரத் (வயது 29). ரவுடியான இவர் மீது 2 கொலை , 3 கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. பிரபல ரவுடியானமடுவுபேட் முரளியின் கூட்டாளியான இவர், அவரது கொலைக் குப்பின் புதிய பஸ்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அடிதடி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தின் எதிரே உள்ள மாஸ் ஓட்டல் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு பரத் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மற்றொரு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் பரத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்து கிழக்குப்பகுதிபோலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடா ஜலபதி, மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது.
ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக உருளையன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரத் தனது பகுதியை சேர்ந்த கூட்டாளிகளான கருப்பு முரளி, பெர்னாண்டஸ், ஸ்டீபன், ஆனந்த், ஜான், சதீஷ் ஆகியோரையும் தனது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்ட அழைத்து வந்துள்ளார். நாளடைவில் ஆட்டோ ஸ்டாண்டில் யார் பெரியவர் என அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரத் தனது கூட்டாளிகளை தாக்கியுள்ளார்.
ஆயுதபூஜை தினத்தன்றும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து அவர்களை ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து நீக்க பரத் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பு முரளி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து பரத்தை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையாளிகளான முதலியார்ேபட்டை ரவி (32), கோவிந்த சாலை பகுதியை சேர்ந்த கருப்பு முரளி (32) , பெர்னாண்டஸ் (33), பொட்டி வீரன் (27), ஸ்டீபன்ராஜ் (29) , சதீஷ்குமார் (28), ஆனந்த் (26), ஜான் 30) , உள்ளிட்ட 8 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். கைதான அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையில் வேறுயாருக்காவது தொடர்பு உண்டா கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.