என் மலர்
புதுச்சேரி
சுற்றுலா பயணிகளை வரவேற்க புதுவையை அரசு மாற்றி வருகிறது -முதல்-அமைச்சர் ரங்கசாமி
- புதுவையில் சர்வதேச சுற்றுலா உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா புதுவையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
- நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் ரங்கசாமி,புதுவையில் சுற்றுலா துறை வேகமாக வளர்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் சர்வதேச சுற்றுலா உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா புதுவையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. புதுவை அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சிங்கப்பூர் யுனைடெட் ஹோல்டிங்ஸ் இன்க் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.
இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளை ஆன்லைனில் இணைத்தது. சிங்கப்பூர் யுனைடெட் ஹோல்டிங்ஸ் இன்க் தலைவர் முகமது ஜின்னா வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் ரங்கசாமி,புதுவையில் சுற்றுலா துறை வேகமாக வளர்கிறது.புதுவையின் முக்கிய வருவாய் சுற்றுலா துறையில் இருந்து கிடைக்கிறது.
புதுவையில் கடற்கரையை மேம்படுத்துவது போல ஏரி,குளங்களை அரசு மேம்படுத்துகிறது.
தற்போது வாரத்தில் கடைசி 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.வாரத்தின் 7 நாட்களும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக புதுவையை அரசு மாற்றி அமைத்து வருகிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பழமை மாறாமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்த இந்த மாநாட்டில் ஆலோசித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் எம்.எல்.ஏ. சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.