என் மலர்
புதுச்சேரி
வியாபார போட்டியில் பெண் மீது தாக்குதல்
- மடுகரையில் வியாபார போட்டியில் வேர்கடலையை வீசி ஏறிந்து பெண்ணை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மடுகரை அருகே தமிழக பகுதியான மேல்பாதி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அச்சுதன்.
புதுச்சேரி:
மடுகரை அருகே தமிழக பகுதியான மேல்பாதி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி குப்பம்மாள்(வயது48). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மடுகரை-சிறுவந்தாடு ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு வேர்கடலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடை அருகே மடுகரையை சேர்ந்த கிருபாகரன்(38) மற்றும் அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்த் ஆகியோர் தனித்தனியாக சால்னா கடை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே குப்பம்மாளுக்கும் கிருபாகரனுக்கும் வியாபார போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று கிருபாகரன் குப்பம்மாளிடம் உன்னிடம் வேர்கடலை வாங்குபவர்கள் தோல்களை எனது கடை முன்பு வீசி செல்கிறார்கள். எனவே கடையை காலி செய் என்று கூறினார்.
அதற்கு குப்பம்மாள் கடையை எடுத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே கிருபாகரன் வேர்கடலை கூடையை ரோட்டில் வீசி குப்பம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் குப்பம்மாளின் தலைமுடியை பிடித்து கையாலும், காலாலும் தாக்கினார். மேலும் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து குப்பம்மாளை கையிலும், தலையிலும் தாக்கினார். அதோடு அருகில் சால்னா கடை வைத்திருக்கும் கிருபாகரனின் உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்த் ஆகியோரும் குப்பம்மாளை தாக்கி இனிமேல் இந்த பக்கம் வந்தால் உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறிய படியே குப்பம்மாளை விரட்டி தாக்க முயன்றனர்.
இதனால் பயந்து போன குப்பம்மாள் அந்த கும்பலிடமிருந்து தப்பி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் கண்ணில் காயமடைந்ததால் அதற்காக தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து குப்பம்மாள் மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.