என் மலர்
புதுச்சேரி
புதுவை மாநில வளர்ச்சியில் ஓராண்டு சாதனைகள்-செல்வகணபதி எம்.பி.
- புதுவை மாநில வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் செய்த பணிகளை செல்வகணபதி எம்.பி. பட்டியலிட்டுள்ளார்.
- கடந்த ஓராண்டில் புற்று நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பெற்று தரப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் செய்த பணிகளை செல்வகணபதி எம்.பி. பட்டியலிட்டுள்ளார்.
புதுவை எம்.பி. செல்வகணபதி கடந்த ஓராண்டில் ஆற்றிய பணிகளை விளக்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவாது:-
நாடாளுமன்ற கூட்டத்தில் 58 நாட்கள் (93 சதவீதம்) பங்கேற்று 99 வினாக்களை எழுப்பியுள்ளார். அப்போது மாநிலத்துக்கு கூடுதல் நிதி தேவை, பல்கலைக்கழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை, புதுவைக்கு 3-வது கேந்திரிய வித்தியாலயா பள்ளி, விமானதள விரிவாக்கம், காரைக்காலில் விமான தளம், சரக்கு கப்பல் போக்கு வரத்தை தொடங்குவது, காட்டுநாயக்கன், எருக்குலா, மலைக்குறவன், குறும்பன் ஆகிய 4 பழங்குடி சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தொடர் முயற்சி எடுக்கப்பட்டது.
கடந்த ஓராண்டில் புற்று நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பெற்று தரப்பட்டது. பிள்ளைச்சாவடியில் மாற்றுதிறனாளிகள் செயல் கருவி தொழிற்சாலையை ரூ.30 கோடியில் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 2017 வரை மருத்துவம் சார்ந்த பட்டயம் படித்த இளநிலை மருத்துவர்கள் மருத்துவ கல்லூரிகளில் பணியில் தொடர மருத்துவ பட்ட மேற்படிப்பு வாரிய தலைவருக்கு விளக்கி சாதகமான தீர்வு காணப்பட்டது.
ரோடியர் மில் தொழிலாளர்களின் வைப்பு நிதி ரூ.3 கோடியே 13 லட்சத்தை விடு வித்து அவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையான 10 மடங்கு உயர்த்தப்பட்ட இட அனுமதி தொகையை குறைக்க வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை ரெயில் நிலைய வசதிகளை உலக தரத்துக்கு மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டிவனம்-புதுவை-கடலூர் ரெயில் பாதை அமைப்புக்கு புத்துயிர்கொடுத்தல், வில்லியனூர் ரெயில் நிலைய பராமரிப்பை மேம்படுத்துதல், சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை புதுவை வரை நீட்டித்தல், காரைக்கால்-பேரளம் ரெயில்பாதை வேலையை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூவிடம் வலியுறுத்தி ஒப்புதல் பெறப்பட்டு ள்ளது. காமராஜர் வேளாண் விஞ்ஞான மைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை களை அமல்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகள் 100 பேருக்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 3 சக்கர வாகனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 175 பேருக்கு காதுகேட்கும் கருவி வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர அமுத பெருவிழாவையொட்டி 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் ரூ.17 லட்சம் மதிப்பில் சொந்த செலவில் நடத்தப்பட்டது. முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட 150 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற பரிந்துரைக்கப்பட்டது. மேலும் ஜிப்மர் நிர்வாகத்திடம் பேசி நோயாளிகளுக்கு அனைத்து மருந்துகளும் தடங்கல் இல்லாமல் வழங்க தொடர் முயற்சி எடுத்து வருகிறார்.
இதுவரை சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம், மின் சிக்கன விளக்குகளுக்கான ரூ.25 லட்சத்து 80 ஆயிரம், மின்பிடிதுறைமுக முகத்து வாரம் ஆழப்படுத்த ரூ.10 லட்சம், சட்டக்கல்லூரிக்கு பஸ் வாங்க ரூ.24 லட்சத்து 63 ஆயிரம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் வாங்க ரூ.42 லட்சத்து 44 ஆயிரம், கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ.61 லட்சம் வழங்கியுள்ளார்.
விலங்குகளுக்காக ஆம்புலன்சு வாங்க ரூ.5 லட்சத்து 93 ஆயிரம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஜே.சி.பி. வாங்கிட ரூ.35 லட்சத்து 50 ஆயிரம், காரைக்கால் நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்த ரூ.53 லட்சத்து 80 ஆயிரம், 175 பேருக்கு காதுகேட்கும் கருவி வாங்க ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.4 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரம் தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.