என் மலர்
Recap 2024
- ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
- 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக தயாரிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
மறைந்த தலைவர் கலைஞர் பெயரில், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18ம் தேதி மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
- பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
- விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகை ரசித்தார்.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையே, தேர்தல் முடிவுற்ற நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.
இதற்காக, கடந்த மே மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு, படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

பின்னர், மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.
இதைதொடர்ந்து, பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று தனது தியானத்தை தொடங்கி இரவு வரை ஈடுபட்டனார். பிறகு, அன்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.
பிறகு மே 31ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.
பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு, கையில்
கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார்.
மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார்.
பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.
விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார்.
இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.
அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இந்திய அளவில் சக்தி வாய்ந்த தலைவராகவும், சர்வதேச அளவில் மதிப்புமிக்கவராகவும் திகழ்ந்து வரும் பிரதமர் மோடி இங்கு தியானம் செய்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபம் சர்வதேச அளவிலான கவனத்தை பெற்றது.
- 2003-ல் இருந்து பரிந்துரை பெயரில் இருவரில் ஒருவர் பெயராவது இடம் பிடித்து வந்தது.
- முதன்முறையாக இருவருடைய பெயரும் பரிந்துரையில் இடம் பெறவில்லை.
கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.
2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.
2003-ம் ஆண்டில் இருந்து பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.
மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்ளனர்.

இருவர் பெயர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் ரோட்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக ரோட்ரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

இதற்கிடையே பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் விழாவைப் புறக்கணித்தது.
- மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
- தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் களமிறங்கினார்.
18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் மாதம் வரையில் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிட்டு மக்களவை தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கின. மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பல்வேறு திருப்பங்களும் நடைபெற்றது.
அந்த சமயம் யாரும் எதிர்பாராத நிலையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
இதுகுறித்து கூறிய தமிழிசை, "தீவிரமான மக்கள் பணியை நேரடியாக செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்தபோது மக்களுக்கான ஆளுநராகவே இருந்திருக்கிறேன். ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுவபம் அதிகரித்திருக்கிறது. இந்த பதவி என்னுடைய அரசியல் பணியை தடுக்கவில்லை" என்று கூறினார்.

தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலில் தமிழிசை போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார்.
திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்.
ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியடைந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
- மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்ததால் 29 நோயாளிகள் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த சமயத்தில் பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்கு வங்க அரசு தெரிவித்தது.
இதனையடுத்து உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் தீவிரமாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதனிடையே ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளிலிருந்து ராஜினாமா செய்தனர்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைப்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.

இதனையடுத்து சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் இந்த மாதம் மீண்டும் போராட்டங்கள் வெடித்தது.
பல மாதங்கள் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியும் இந்த பாலியல் வழக்கில் தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
- டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
- டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் 7,8 ஆகிய தேதிகளில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசு சார்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
மாநாட்டின் முதல் நாளில் தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, 2வது நாளில் மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 3800 வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உருவாகும் என கூறப்புடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
மூன்றாவதாக சிபிசில் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி முதலீடு- நாகப்பட்டினத்தில் 2400 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
அதானி குழுமம் ரூ.13,200 கோடி முதலீடு- 1000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
எல் அண்டு டி நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு- சென்னையில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
ராயல் என்ஃபீல்டு ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு- காஞ்சிபுரத்தில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
மைக்ரோசாப்ட் இந்தியா ரூ,2740 கோடி முதலீடு- சென்னையில் 167 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
ஹைலி க்லோரி ஃபுட்வேர் நிறுவனம் ரூ.2302 முதலீடு- கள்ளக்குறிச்சியில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
திருவள்ளூரில் ஸ்டெல்லண்டிஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.
இதன்மூலம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது.
- இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
அமராவதி:
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
2024 ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று தாமே மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜெகன் மோகனுக்கு அம்மாநில மக்கள் அதிர்ச்சியையே பரிசாக அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது.
எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 11 தொகுதியில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஆந்திர மாநில முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒய்.எஸ்.ஆர். காஙகிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே நடந்த காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது.
மீண்டும் முதல் மந்திரியாக இங்கு நுழைவேன் எனக்கூறி அழுதபடி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் சந்திரபாபு நாயுடு.

கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இப்படி பல்வேறு அரசியல் காரணங்களால் ஆந்திர மாநில மக்கள் ஜெகன் மோகன் ஆட்சியை ஒதுக்கிவிட்டு, தெலுங்கு தேசத்திற்கு அறுதிப்பெருமான்மை ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வழிவகை செய்தனர்.
- பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
- க ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து அண்டை நாடான லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பின் நட்பில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் விளைவாக ஆண்டில் இடைப்பகுதி முதல் இஸ்ரேல் லெபனான் முழுவதும் பலகட்டங்களாக தாக்குதல் நடத்தி தாக்கி 3,500 பேர் வரை கொன்றது.தலைநகர் பெய்ரூட் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. லெபனான் மீதான இஸ்ரேலின் தரைப்படை ஆக்கிரமிப்பு மற்றும் குண்டுவீச்சுகளால் 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் இஸ்ரேல் குண்டுகளை வீசியபோது படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு ஒரு வாரம் முன்னர் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மீது இஸ்ரேல் அதிநவீன தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தது. லெபனான் முழுவதிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜ்ர்கள் திடீரென வெடித்துச் சிதறின.
இதில் 35 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கனோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களும் வெடிக்கத் தொடங்கின. தாய்லாந்தில் வெடி மருந்து வைத்து தயாரிக்கப்பட்ட பேஜர்களை இஸ்ரேல் உளவுத்துறை ஹிஸ்புல்லாவுக்கு ஏமாற்றி விற்றது பின்னர் தெரியவந்தது.

தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பரில் இஸ்ரேலின் தாக்குதல்கள் லெபனானில் தீவிரமடைந்த நிலையில் நவம்பர் இறுதியில் உலக நாடுகள் முயற்சியால் போர் நிறுத்தம் வந்தது. ஆனால் ஹிஸ்புல்லா இயக்கம் அதற்குள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இஸ்ரேல் - ஈரான்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து மற்றொரு இஸ்லாமிய நாடான ஈரான் நேரடி தாக்குதல் மூலம் உலகை அசர வைத்தது.
இது மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா செப்டம்பர் 27 இல் கொல்லப்பட்டதற்கும், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31 அன்று ஈரானில் சீர்த்திருத்த கட்சியை சேர்ந்த புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பில் கலந்துகொள்ள வந்தபோது தெஹ்ரானில் அவரது தங்குமிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் மூலம் இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.
இவை அனைத்துக்கும் பதிலடியாக அக்டோபர் 1 ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது.
இதில் பெரிய பாதிப்புகள் இல்லாத போதிலும், ஒரு மத்திய கிழக்கு நாடு திருப்பி அடிப்பதை மேற்கு நாடுகள் கடுமையாக கண்டித்தன.

தொடர்ந்து சுமார் 25 நாட்கள் கழித்து அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள இடங்களிலும், மேற்கு மாகாணமான இலாம் மற்றும் தென்மேற்கு குசெஸ்தானிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. ஈரானின் முக்கிய அணு சக்தி தளத்தை அளித்ததாக இஸ்ரேல் பின்னர் தெரிவித்தது.

இஸ்ரேல் - ஏமன் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
அரபு நாடுகளிலேயே ஏழ்மையான நாடான ஏமன் தலைநகர் சனா மற்றும் நாட்டின் வடக்கின் பெரும்பகுதியை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கும் தெற்கில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் இடையே 10 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. செங்கடலில் வரும் கப்பல்களைத் தாக்கி, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் அவர்களின் ஆதிக்கத்தால் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் சரிக்குக்கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
மேலும் ஹவுதிகள் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் சனா விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உலக சுகாதர அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னதாக ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
சிரியாவின் உள்நாட்டு போர் வெற்றி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.

இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் கடந்த டிசம்பரில் ஒரே வாரத்தில் அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் கடைசியாக டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸ் ஐ கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் ரஷியாவுக்கு தப்பியோடினார்.

- மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
- மக்களவை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்டபெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். அந்த சமயத்தில் அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், "எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும்" என்று கூறியிருந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதற்கிடையே மே மாதம் 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மே 31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார்.
அதன்படி மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வந்திறங்கியதும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்தனர்.

இதனிடையே "எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை" என்று பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா கர்நாடக சட்டமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முதற்கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இறுதி வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில் அவர் பின்னடைவை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் உள்ளடக்கிய 2,144 பக்கங்கள் அடங்கிய 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தனர்.

அந்த குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி மீண்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை நிரூபிக்கும் விதமாக அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி மூலம் விடுதி ஒன்றும் பணியில் சேர்ந்த பெண் பின்னர் ரேவண்ணாவின் வீட்டில் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.
பணியில் சேர்ந்த பெண்ணை 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 2020 இல் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா அதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பெண், தான் இங்கு நடந்ததை வெளியே சொல்லப் போவதாகக் கூறியுள்ளார்.
அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா, இதை நீ வெளியே சொன்னால் உனது கணவனை சிறையில் தள்ளுவேன், உனக்கு என்ன செய்தேனோ அதையே உனது மகளுக்கும் செய்வேன். எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி [பாராளுமன்ற உறுப்பினர்] என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை குறிப்பிட்ட உள்ளாடை [lingerie] அணியவைத்து தான் பலாத்காரம் செய்யும்போது சிரித்த மாதிரி இருக்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இந்த கொடூரங்களை அரங்கேற்றியுள்ளான். இதை வெளியில் சொன்னால் ஒவ்வொரு முறையும் தான் எடுத்த வீடியோ பதிவுகளை வெளியிட்டுவிட்டேன் என்று கூறி தொடர்ச்சியாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து முதன்முதலில் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து இந்த கொடூரங்களை செய்துள்ளான் என்று அந்த நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ஒருவரின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
வழக்கு விசாரணையின் இடையே ஜாமின் கோரி பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் தான் உள்ளது. 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- மன அழுத்தங்களை குறைக்க பாடல்கள் மற்றும் இசை பெரும் பங்கை வகுக்கிறது.
- ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காலையில் மக்கள் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இசை மற்றும் பாடல்கள் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பகுதியை வகுக்கிறது. ரெயில் பயணங்கள், பைக் பயணங்கள், என வேலை போகும் மக்கள் வண்டியில் செல்லும் போது அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டு அவர்களின் பயணங்களை இனிமையாக்குகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க பாடல்கள் மற்றும் இசை பெரும் பங்கை வகுக்கிறது.
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல பாடல்கள் வெளியாகின்றன. அவையுடன் சேர்ந்து இண்டிபெண்டன்ட் பாடல்களும் வெளியாகின்றன. இதில் இந்தாண்டு வெளியான பாடல்களில் மக்களால் அதிகம் கேட்கப்பட்டு ரசிக்கப்பட்ட பாடல்களை இச்செய்தியில் பார்க்கலாம்.
மனசிலாயோ
டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் , பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பில் வெளியானது வேட்டையன் திரைப்படம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலில் மறைந்த மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டது கூடுதல் சிறப்பு. சூப்பர் சுபு, விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத், தீப்தி சுரேஷ், யுகேந்திரன் பாடியுள்ளனர்.
ஹே மின்னலே
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் அமரன். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக ஹே மின்னலே மற்றும் உயிரே பாடல்கள் வைரலானது. ஹே மின்னலே பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
பையா டேய்
இப்பாடல் ஒரு இண்டிபெண்டன் பாடலாகும். இந்த பாடலை இசையமைத்து எழுதி பாடியிருப்பது அசல் கோளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடல் மிகப் பெரிய ரீச்சாகி வைரலானது. இன்ஸ்டாகிராமில் இந்த பாடலை பலர் ரீல்ஸ் செய்து பதிவிட்டுருந்தனர்.
பீலிங்க்ஸ்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது புஷ்பா 2 திரைப்படம். இப்படத்தில் பீலிங்ஸ் மற்றும் கிஸிக் பாடல் மிகப்பெரியளவில் மக்களின் கவனத்தை பெற்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சில்லாஞ்சிருக்கியே
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா , சஞ்சனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லாஞ்சிருக்கியே பாடல் மிகவும் பிரபலமாகி ஹிட்டானது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் பிரதீப் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து பாடியுள்ளனர்.
கோல்டன் ஸ்பாரோ
தனுஷ் ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அனிகா, பவிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்னும் வெளிவராத இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலானது கோல்டன் ஸ்பேரோ. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை அறிவு வரிகளில் சுப்லாஷினி, ஜிவி பிரகாஷ், தனுஷ் , அறிவு என அனைவரும் பாடியுள்ளனர். இப்பாடல் யூடியூபில் 119 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆச கூட & கட்சி சேர
இப்பாடல்களும் ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாகும். இப்பாடலை இசையமைத்து பாடியவர் சாய் அபயங்கர். இவர் தற்பொழுது லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். இந்த இரு பாடல்களும் வெளியான நாள் முதல் இந்த நாள் வரை பலருக்கும் பிடித்தமான பாடலாக இருக்கிறது. இந்த இரு பாடலின் வீடியோக்களும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இதில் நடனமாடிய நடிகை சம்யுக்தா மற்றும் பிரீத்தி முகுந்தன் சிறப்பாக நடனாமாடிருப்பர்.
தீமா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்றுள்ள தீமா பாடல் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியட்து. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத அனிருத் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் என்ற வார்த்தை விராட் கோலியால் டிரெண்டானது.
- ரிஷப் பண்ட் கம்பேக் என்ற வார்த்தையும் டிரெண்டானது.
2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்தும் எதனால் அந்த வார்த்தை டிரெண்டானது குறித்தும் இந்த செய்தியில் காண்போம்.
1. ஜஸ்பிரிட் பும்ரா (jasprit bumrah)

டி20 உலகக் கோப்பை முதல் பார்டர் கவாஸ்கர் டிராபி வரை பந்து வீச்சில் மிரட்டி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட்டில் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் மட்டும் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக அளவில் பேசப்பட்ட வார்த்தைகளில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார்.
2. ஹர்திக் பாண்ட்யா (hardik pandya)

பாண்ட்யா டிரெண்டாக முக்கிய காரணமாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் மீது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மைதானத்தில் விளையாடும் போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். டாஸ் போட வரும் போது ரோகித் ரோகித் என முழங்கினர். இதற்கு மேலாக மைதானத்திற்குள் ஒரு நாய் வந்தது. உடனே அதை பார்த்து ஹர்திக் ஹர்திக் என கூச்சலிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்கில் டிரெண்டாகினார்.
இதனையடுத்து நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை திசை திருப்பி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் மும்பை மைதானத்திற்கு வந்த போது எந்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷமிட்டார்களோ அவர்களே அவருக்கு எதிராக ஆதரவு தெரிவித்தனர்.
3. டி20 உலகக் கோப்பை (t20 world cup)

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
4. சஞ்சு சாம்சன் (sanju samson)

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ரொம்ப காலமாக தவித்த வீரர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார். தொடர்ந்து 2 சதங்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்கள் விளாசி சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார்.
தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கான நிறந்தரமான இடத்தை அவர் இந்த ஆண்டு தக்க வைத்து கொண்டார்.
5. கவுதம் கம்பீர் (gambhir era)

இந்த ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை இழந்தது. 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்ததால் கவுதம் கம்பீரின் வீரர்கள் தேர்வு அதிகாரத்தை பிசிசிஐ பரித்தது. தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் கவுதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
6. இலங்கை & நியூசிலாந்து ஒயிட்வாஷ் (SL&NZ whitewash)

இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
7. ரிஷப் பண்ட் கம்பேக் (rishabh pant comeback)

2022-ம் ஆண்டு ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதில் விளையாடவில்லை.
அதன் பிறகு பூரண குணமடைந்து டி20 உலகக் கோப்பையில் களமிறங்கினார். இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தை காயம் என கூறி தனது ஐடியா மூலம் சிறிது நேரம் தாமதப்படுத்தினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இதுவும் பார்க்கப்பட்டது.
அதன்பிறகு 2025-ம் ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது. இது ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.
8. அஸ் அண்ணா (Ash anna)

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டியுடன் தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இதனால் அஸ் அண்ணா என்ற வார்த்தை அதிக பேசப்பட்டது. அவர் குறித்த பல முக்கியமான வீடியோக்கள் சிறந்த பந்து வீச்சு பேட்டிங் என அனைத்து டிரெண்டானது.
9. ஓய்வு அறிவிப்பு (retirement)

இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து அதிக பேர் ஓய்வை அறிவித்தனர். இதனால் Retirement என்ற அதிகமாக பேசப்பட்டது. டீன் எல்கர், டேவிட் வார்னர், கிளாசன், நீல் எல்கர், தினேஷ் கார்திக், கேதர் ஜாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன், தவான், டேவிட் மலான், மொயின் அலி, ஷகிப் அல் ஹசன், மேத்வூ வேட், விருத்திமான் சகா, அஸ்வின், சவுத்தி என முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தனர்.
10. அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் (outside the off stump)

outside the off stump என்ற வார்த்தை டிரெண்டாக முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய அணியின் விராட் கோலி. இவர் கடந்த சில போட்டிகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்புக்கு சென்ற பந்தை அடிக்க முயற்சித்து அவுட் ஆகி வந்தார். இதனை பல முன்னாள் வீரர்கள் எடுத்து கூறியும் அதனை கண்டுக்கொள்ளாமல் அந்த ஷாட்டை ஆட முயற்சித்து அவுட் ஆனார்.
குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 இன்னிங்சுகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் பந்தில் தான் விராட் கோலி அவுட் ஆனார்.
- நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை.
- அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.
சென்னையில் கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, '300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்களும் வலுத்தன.
தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள்.
தெலுங்கு மக்களை நான் எதுவுமே சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?.
நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின்னர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்து விடும். எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும்" என கோரினார்.
இந்த வழக்கு எழும்பூர் 14-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில், மனுதாரர் சிங்கிள் மதர் என்றும், மனுதாரருக்கு சிறப்பு குழந்தை உள்ளதால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என்னை குடும்பம் போல் பாதுகாத்த என்னுடைய நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி.
ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி'' என்று கூறினார்.