என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட் - நாம் தமிழர் கட்சியும் நிர்வாகிகளின் தொடர் விலகலும்
- கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகினர்
- கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை.
நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகினர். இதேபோல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகினார்.
அதேபோல் நா.த.க. நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.
இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசி வருகிறார் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.
கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறுகையில்,
கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதலமைச்சர் ஆவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.
ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.
அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர்.
இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.
சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கூறுகையில்,
நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் கூறுகையில்,
கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம் என்று கூறினர்.
இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால், கட்சியில் இருந்து வெளியேறுமாறு கூறினார் என்று சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை. கட்சிக்காக பண விரயம் செய்ய வேண்டும். ஆனால், கேள்வி கேட்டால் பதில் கிடைப்பதில்லை என்று கூறினார்.
மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் இளவஞ்சியும் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இது தொடர்பாக இளவஞ்சி கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த முதல் மருத்துவர் நான்தான். 14 வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற சாதாரண பதவியில் இருக்கிறேன். இதே அணியில் எனக்குப் பின்பு வந்தவர்களுக்கு தலைவர், துணைத் தலைவர் எனப் பதவி கொடுத்தார் சீமான். என்னை செயல்படவே விடவில்லை" என்று கூறினார்.
அதேநேரம், நாம் தமிழர் நிர்வாகிகள் குறித்து சீமான் பேசிய சில உரையாடல்கள் ஆடியோ வடிவில் பொதுவெளியில் பரவியதும் நிர்வாகிகள் விலகலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது,
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல். நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம். மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம் என்று சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.