search icon
என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாகை சூடிய இந்தியா கூட்டணி
    X

    2024 ரீவைண்ட்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாகை சூடிய இந்தியா கூட்டணி

    • ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது.
    • அங்கு இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்து அசத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜ.க. மற்றொரு அணியாகவும், கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டது.


    ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்றது.

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜம்முவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்வதால் அவர்களின் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் அப்படியே பா.ஜ.க.வுக்கு விழுந்தது. மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 29 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 8 இடங்களிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.


    இதேபோல, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் பகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. இந்தியா கூட்டணி 41 இடங்களில் வெற்றிபெற்றது.

    ஆக, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், பா.ஜ.க. 29 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

    காஷ்மீரைப் பொறுத்த அளவில் தேசிய மாநாடு கட்சிக்குத்தான் பெரிய வெற்றியாகும்.

    ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது உலகளவிலும், தேசிய அளவிலும் அதிக கவனம் பெற்றது.

    Next Story
    ×