என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட்.. பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய திருப்பதி லட்டு விவகாரம்
- திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்தார் .
- ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.
லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதனிடையே திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் யூட்யூப் சேனலில் வெளியான காணொளிக்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வீடியோ பரிதாபங்கள் யூட்யூப் சானலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த வீடியோ யூட்யூபில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அறிவித்தார். பின்னர் பரிதாபங்கள் குழுவினர் பாஜகவிடம் மன்னிப்பு கேட்டபிறகு இந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்தது.
அதே போல் மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது 'லட்டு என்பது சென்சிட்டிவான விஷயம்' என்று கார்த்தி பேசிய வீடியோ வைரலானது. இதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக கார்த்தி இந்த விவகாரம் தொடர்பான மன்னிப்பு கோரினார்.
திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திராவை தாண்டி தமிழ்நாட்டிலும் அந்த சமயத்தில் பல பரபரப்புகளை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.
பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை பவன் கல்யாண் நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் களைப்பில் பவன் கல்யாண் ஓய்வெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், திருப்பதி லட்டுவில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும்வகையில் ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இதனையடுத்து பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.
லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்றனர்.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்த விவகாரம் அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளானாலும் மக்களிடையே பெரிதாய் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் அப்போதும் திருப்பதி லட்டுவை கடவுளின் பிரசாதம் என்று நினைத்தே வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.