search icon
என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட் - ஆளுநரும், சர்ச்சையும்!
    X

    2024 ரீவைண்ட் - ஆளுநரும், சர்ச்சையும்!

    • அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
    • சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை.

    தமிழ்நாடு மாநில ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.

    ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    ஆளுநர் ஆர்.என் ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில் தற்போது இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மையே தேவையற்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.

    தமிழ்நாடு பல்கலைக்கழங்களின் வேந்தரான ஆளுநருக்கும் உயர்கல்வித்துறைக்கும் இடையே அவ்வப்போது வெளிப்படையாகவே பிரச்சனை வெடித்தது. உயர்கல்வி துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது நடந்த சர்ச்சைகளே இதற்கு உதாரணம். அப்போது ஆளுநர் பங்கேற்ற விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த சம்பவமும் நிகழ்ந்தன.

    தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர், சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்று கூறினார்.

    சமீபத்தில் சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'இந்தி மாத' நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம் பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது பாடியவர்களின் கவனக்குறைவால் நடந்த தவறு என விளக்கம் அளிக்கப்பட்டது.

    திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது," என்று கூறினார்.

    இதற்கு பதில் தரும் விதமாக சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை என்று கூறினார்.

    இவ்வாறாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி கூட்டணிக் கட்சிகளோடு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது தி.மு.க. அரசு.

    Next Story
    ×