search icon
என் மலர்tooltip icon

    சிங்கப்பூர்

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் உள்ளிட்டோர் இன்று களமிறங்குகின்றனர்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' ஜோடியான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட்- மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 20-22, 18-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இரண்டாவது நாளான இன்று இந்தியா சார்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

    • தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது.

    சிங்கப்பூரில் மீண்டும் புதிய கோவிட் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    இதுபற்றி சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பேசுகையில், நாட்டில் கொரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

     

    கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொலாத பட்சத்தில் விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிங்கப்பூரின் 4-வது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வோங் பதவியேற்றார்.
    • லீ சியோன் லூங் கடந்த 20 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் பிரதமராக பதவி வகித்தவர் லீ சியோன் லூங். இவர் 2004-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தையும் துணை பிரதமரும், நிதி மந்திரியுமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அதிபர் சண்முகரத்தினம் பரிந்துரை செய்தார்.

    இதற்கிடையே, சிங்கப்பூர் நிதி மந்திரியான லாரன்ஸ் வோங்க் அடுத்த பிரதமராக மே 15-ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், சிங்கப்பூரின் 4வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார்.

    • வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ நாளை (15-ந்தேதி) பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் நாளை புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மந்திரி சபையில் இடம்பெறுவோர் பெயர்களை அவர் அறிவித்தார். இதில் முந்தைய மந்திரி சபையில் துணை மந்திரிகளாக இருந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    தற்போது மந்திரிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோர் புதிய மந்திரி சபையிலும் தொடர்வார்கள் என லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.
    • கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன், மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.

    வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கினார். மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில் அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மல்லிகா பேகம் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் கோர்ட்டில் விசாரணையின்போது கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் காதலியை கொன்ற வழக்கில் கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    • நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
    • பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் என லீ சியென் லூங் கூறி உள்ளார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.

    இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம்' என அவர் தெரிவித்துள்ளார்.

    • ஈஸ்வரன் அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி-யை சேர்ந்தவர்
    • உலகிலேயே சிங்கப்பூரில்தான் அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது

    சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60).

    கடந்த 2023 ஜூலை மாதம், அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி (People's Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

    பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுக்கள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எஃப் 1 (F1) எனப்படும் அதிவேக கார் பந்தயத்தை ஆங் பெங் செங் (Ong Beng Seng) எனும் கோடீசுவரர் நடத்த ஈஸ்வரன் சட்டவிரோதமாக வழிவகை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    தான் செய்த உதவிக்கு பதிலாக ஈஸ்வரன், பல விமான பயணங்கள், சுற்றுலா, உலகின் பெரும் நட்சத்திர ஓட்டல்களில் பல முறை இலவசமாக தங்கும் வசதி, இலவச ஃபார்முலா 1 கார் பந்தய டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை 1,60,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிற்கு அந்த கோடீசுவரரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    27 குற்றச்சாட்டுகளிலும் "ஆங்" ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


    அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் தருவதில் உலகிலேயே சிங்கப்பூர் முதல் இடம் வகிக்கிறது.

    அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும் அதிக ஊதியம் பெற்றால், ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக பணி புரிவார்கள் என அந்நாட்டில் நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    அந்நாட்டில் அமைச்சர்களின் தொடக்க மாத ஊதியமே 50,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேல் இருக்கும்.

    1986ல் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவாகும் நிலையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    சுமார் 37 ஆண்டுகள் கடந்து தற்போது ஈஸ்வரன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

    • சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிங்கப்பூர்:

    சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும். இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    • மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர்.
    • இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் இந்த விருதில் அடங்கும்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான மீரா சந்த் (81), பெற்றுள்ளார்.

    மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். மீரா சந்த் உடன் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலேசியா நாட்டிய கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீது ஆகியோரும் இந்த உயரிய விருதை பெற்றனர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் இந்த விருதில் அடங்கும்.

    சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மீரா சந்த் உள்பட 3 பேருக்கும் விருது வழங்கி கவுரவித்தார்.

    கடந்த வருடம் தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
    • சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த சின்னையா (வயது 26) என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த வழக்கில் சின்னையா கைது செய்யப்பட்டார்.

    அந்த மாணவி, சம்பவத்தன்று இரவு பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்ற போது, அவரை சின்னையா வனப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மாணவியை அவர் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    மாணவியின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

    சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சின்னையாவின் மனநிலையை பற்றி பல மனநல மதிப்பீடுகள் தேவைப்பட்டதால் இவ்வழக்கு விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று கோர்ட்டு தெரிவித்தது.

    • யுரேனியன் வம்சாவளியினர் இந்தியர்கள் போல தோற்றம் கொண்டவர்கள்.
    • கால் டாக்சி டிரைவர் இனவெறியுடன் பேசியதை ஜனெல்லா தனது செல்போனில் பதிவு செய்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரை சேர்ந்தவர் ஜனெல்லா ஹோடன் (வயது 47) சம்பவத்தன்று இவர் தனது 9 வயது மகளுடன் வெளியில் செல்வதற்காக கால் டாக்சிக்கு முன்பதிவு செய்து இருந்தார்.

    அதன்படி கால் டாக்சி நிறுவனத்தில் இருந்து காரும் அனுப்பப்பட்டது. அந்த காரில் ஜனெல்லா ஹோடன் தனது மகளுடன் பயணம் செய்தார். சிறிது தூரம் சென்றதும் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது தெரிய வந்தது.

    இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென ஜனெல்லா ஹோடனை பார்த்து கத்த ஆரம்பித்தார். செல்லும் இடம் குறித்து தவறான தகவல் கொடுத்ததாகவும், இதனால் தவறான வழியில் வந்து விட்டதாகவும் கூறி திட்டினார்.

    மேலும் ஜனெல்லா ஹோடனை இந்திய வம்சாவளியினர் என கருதி நீங்கள் இந்தியர்கள், நான் சீனாவை சேர்ந்தவன். நீங்கள் ஒரு முட்டாள், நீங்கள் மிகவும் மோசமானவர்கள் என சத்தம் போட்டு கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனெல்லா நான் இந்தியாவை சேர்ந்தவர் கிடையாது. சிங்கப்பூரை சேர்ந்த யுரேனியன் வம்சாவளி என்று கூறினார்.

    யுரேனியன் வம்சாவளியினர் இந்தியர்கள் போல தோற்றம் கொண்டவர்கள். இதை பார்த்து தான் கால் டாக்சி டிரைவர் இன வெறியுடன் ஆவேசமாக திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த டிரைவர் ஜனெல்லாவை பார்த்து உங்கள் மகள் 1.35 மீட்டர் உயரம் கொண்டவர் என்றும் கூறினார். அதற்கு அவர் தனது மகளின் உயரம் 1.37 மீட்டர் ஆகும் என்று பதில் கூறினார். சிங்கப்பூரை பொறுத்தவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வாகனங்களிலும் 1.35 மீட்டர் உயரத்துக்கு குறைவான உயரம் கொண்டவர்களுக்காக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இருக்கை அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கால் டாக்கி டிரைவர் இனவெறியுடன் பேசியதை ஜனெல்லா தனது செல்போனில் பதிவு செய்தார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். இது சிங்கப்பூரில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அந்த கால் டாக்சி நிறுவனம் கூறும்போது இன வேறுபாடுகள் குறித்த கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

    • நண்டு உணவுக்கு 56 ஆயிரம் ரூபாய் பில் போட்டதால் அதிர்ச்சி
    • பேச்சுவார்த்தைக்கு பிறகு 6479 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது

    ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு (Crab Dish) பிரமாதமாக இருக்கும். அதன்விலை 20 டாலர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நண்டை அவர்களது மேஜையில் வைத்து இதை சமைக்க சொல்லலாமா? எனக் கேட்டுள்ளார். இவர்களும் ஓ.கே. சொல்லியுள்ளனர்.

    ஜுன்கோ தனது நண்பர்களுடன் நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார். அப்போது நண்டு உணவுக்கு 56 ஆயிரம் (680 டாலர்) பில் போட்டிருப்பதை கண்டு வாயடைத்துப் போனார். அவருடன் வந்தவர்களில் ஒருவர், ''ஓட்டலில் உள்ள அனைத்தையும் எங்களுக்காக சமைப்பார்கள் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. மற்ற ரெஸ்டாரன்ட்களில் அவற்றில் ஒரு பகுதியைத்தான் சமைப்பாளர்கள்'' என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்க, அவர்கள் 100 கிராம் நண்டு டிஷ் 20 டாலர். உங்களுக்கு 3,500 கிராம் நண்டு டிஷ் பரிமாறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. சப்ளை செய்த நபர் அவ்வாறு தெரிவிக்கவில்லையே, நாங்களும் மொத்தத்தையும் ஆர்டர் செய்யவில்லையே, என்று ஜுன்கோ தெரிவித்து, போலீஸை அழைக்க கேட்டுக்கொண்டார்.

    அதன்படி போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது ஜுன்கோ நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார். அதற்கு ரெஸ்டாரன்ட் தரப்பிலும், தங்களது சப்ளையர் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துரைத்தார் என்று விளக்கம் அளித்தனர்.

    இறுதியாக ரெஸ்டாரன்ட் 78 டாலர் (6,479 ரூபாய்) தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்பின் ஜுன்கோ மீதி பணத்தை செலுத்தினார்.

    ×