என் மலர்
நீங்கள் தேடியது "100 Days Work Scheme"
- ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் அண்ணாமலை பாசாங்கு காட்டுகிறார்.
- பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுதான் நாங்கள் போராடுகிறோம்.
100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுகவினரின் போராட்டத்தை விமர்சித்து தமிழக அபாஜாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.39,339 கோடியை ஒதுக்கியுள்ளது. ஸ்டாலின் அவர்களே, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நீங்கள் செய்த ஊழலை விசாரிக்க சிபிஐக்கு ஒப்புதல் அளிப்பீர்களா?
2) அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
3) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்துவதற்கான தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள்?
இந்நிலையில், "உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும்" என்று அண்ணாமலையின் விமர்சனத்துக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அவதூறுகளின் அரசனாகிய அண்ணாமலையே, இதுதான் உண்மை!
தமிழ்நாட்டு அரசியலில் களங்கமாக நிற்கும் அவதூறுகளின் அரசன் அண்ணாமலை திராவிட மாடல் அரசின் மீது அவதூறு பரப்புவதும் பிறகு பல்டி அடிப்பதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு. அந்த வரிசையில் இப்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சிக்கியிருக்கிறார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் பொய்யைப் பரப்பி, அதனை நிறுவ முயன்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை. 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4,034 கோடியைத் தராமல், நாட்களை உயர்த்தவில்லை என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் பாசாங்கு காட்டுகிறார்.
2024 மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் 20-ம் தேதி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவோம் எனச் சொன்னோம். திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு மார்ச் 28-ம் தேதி அவசர அவசரமாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது ஏன்? திமுக தேர்தல் அறிக்கையில் நாட்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் எனச் சொன்னவுடன் முந்தி கொண்டு ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதே திமுகவின் சாதனைதான். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தார்?
பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுதான் நாங்கள் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தையே சிதைக்கும் வகையில் பாஜக நிர்வாகியை விட்டு அதில் குழப்பத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அது அம்பலப்பட்டதும் அடுத்தடுத்து பொய்களைப் பரப்பி வருகிறார்.
தமிழ்நாட்டை விட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் குறைவான நிதியைப் பெற்றுள்ளதாக அண்ணாமலை தவறான புள்ளி விவரங்கள் அளித்திருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைப் பொறுத்தவரை எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளது, எந்த மாநிலம் சரியாகச் செயல்படுத்தவில்லை என்பதுதான் முக்கியம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிக மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம்.
இந்தியாவிலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். தமிழ்நாட்டில்தான் 86 சதவீதம் பெண்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில் 29 சதவீதத்துக்கு மேல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் மாற்றுத்திறனாளிகள். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது.
இந்த ஆண்டு தமிழ்நாடு நிர்ணயித்த 'மனித உழைப்பு நாட்களான' 20 கோடி நாட்களைக் கடந்து 24 கோடி நாட்களைத் தொட்டுள்ளது. இதை 35 கோடியாக உயர்த்தித் தரவேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பே ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட வேலைக்குச் சுமார் ரூ 1056 கோடி நிதியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று உழைத்த உழைப்பாளிகளின் ஊதியத்தைதான் நாங்கள் கேட்கிறோம். இது எங்களது உரிமை. எங்களது உரிமைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தினமும் ஒரு பொய்யைப் பரப்பி அதில் சுகம் கண்டு வருகிறார் அண்ணாமலை.
சிபிஐ என்ன, எந்த விசாரணை அமைப்பையும் சந்திக்கத் தயார். அதற்கு முன்பு முதலில் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கட்டும். உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
- திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.
முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.
நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.
ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.
ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேவக்கோட்டை தாலுகா கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த கருப்பையா வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
- வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்ததாக குற்றச்சாட்டு
மதுரை:
வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெயர்களை சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் கருப்பையா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், தாயார், உடன்பிறந்தவர்கள் பெயர் மற்றும் வெளிநாட்டில் வாழும் நபர்கள், கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் நபர்களின் பெயர்களும் சேக்கப்பட்டுள்ளன. அவர்கள் வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்துள்ளனர். ஊராட்சி தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.