search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "13th century"

    • கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.
    • இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார் பட்டியில் உள்ள பழமையான ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் அப்பாஸ் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    இது குறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில்

    திருப்பணி செய்பவர்கள், கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது, மண்ணிற்குள் புதைந்திருந்த 2 கல்வெட்டுகளை எடுத்து வைத்திருப்பது கள ஆய்வில் தெரியவந்தது. முதல் கல்வெட்டு கோவில் அதிட்டான கல்பலகையில் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.

    தவச்சதுர்வேதி மங்கலத்து பிரக்மரு நாட்டுச் செட்டியும் நீ என தொடங்கும் முதல் பகுதியில் இக்கோயிலில் இருக்கும் இறைவனின் பெயர் திருவகத்தீஸ்வர முடைய நாயனார் என்பது புலனாகிறது. சதுர்வேதி மங்கலம் என்பது பிராமணர்களுக்கு அரசு வழங்கிய நிலம். வடபகுதியில் இருக்கும் பிரக்மாரு நாட்டைச் சேர்ந்த செட்டி என்பவர் கொடுத்த வரியும், பிற நில வரிகளும் கூறுவதாக கல்வெட்டு செய்தி இருக்கலாம். மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் முன் கல்வெட்டு எழுதப்பட்டிருப்பது தெரிய வருகிறது.


    கல்லின் பக்கவாட்டில் உள்ள 2-ம் பகுதி கல்வெட்டில் ஆறு வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவரகத்தீஸ்வரர் உடைய நாயனார் கோவிலில் உள்ள விநாயகருக்கு தினமும் திருவமுது படைப்பதற்காக அரைக்காணி முந்திரிகை அளவுள்ள நிலத்தை மிழலைக் கூற்றத்து நடுநாட்டுச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுவதாக உள்ளது. மிழலைக்கூற்றம் என்பது அறந்தாங்கி வட்டத்து தென்பகுதியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் பகுதியும் கொண்டது ஆவுடையார் கோவில் வட்டாரப் பகுதி. இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது. வைகை ஆற்றின் முக்கிய கிளை நதியான மஞ்சளாற்றின் வடகரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் இப்பகுதி செழிப்புற்றிருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றார்.

    • தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
    • குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் மன்னவனூர் அரசுமேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் பழனிமுருகன் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.

    இது குறித்து ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கூறியதாவது:-

    தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல சிறு சிறு நாடுகளாகப் பிரித்தனர். அதன்படி மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான இன்றைய வருசநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

    இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி, பெருங் கற்கால கல்லறைகள், பழைய புதிய கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் (கி.பி. 1297) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வருசநாடு தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்டது.

    இதில் குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    இந்த கல்வெட்டு முழுமையாக கிடைக்கப்பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இருப்பினும் பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×