search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார்.
    • டி20 கிரிக்கெட்டில் 119 இன்னிங்ஸ்களில் விளையாடிய பாபர் அசாம் 4192 ரன்கள் குவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இதனையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இப்போட்டியில் 41 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 2 ஆம் இடம் பிடித்தார்.

    டி20I கிரிக்கெட்டில் 151 இன்னிங்ஸ்களில் விளையாடி 4231 ரன்கள் குவித்த ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 119 இன்னிங்ஸ்களில் விளையாடி 4192 ரன்கள் குவித்து பாபர் அசாம் 2-ம் இடமும் 117 இன்னிங்ஸ்களில் விளையாடி 4188 ரன்கள் குவித்து விராட் கோலி 3-ம் இடத்தில உள்ளார்.

    கோலியும் ரோகித்தும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் விரைவில் இப்பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார்.
    • அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    செஞ்சுரியன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. செஞ்சுரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.

    திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 107 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்னும் ( 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஷிமிலேன் தலா 2 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கவர்த்தி 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா , அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இந்த போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயம் இல்லாமல் ஆடுங்கள் என்பதை தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட நினைத்தோமோ அதை செயல்படுத்தினோம். பயிற்சியின் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.

    வீரர்கள் சில போட்டிகளில் எளிதில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமும், உத்வேகமும் இருந்தால் மட்டுமே 20 ஓவரில் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.

    முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார். இதனால் இந்த ஆட்டத்தில் 3-வரிசையில் அனுப்பி வைத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பர்கில் நாளை நடக்கிறது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
    • தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    செஞ்சூரியன்:

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்திலும், கெபேஹாவில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையலான 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் 202 ரன்கள் குவித்து எளிதில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் வேகமும் பவுன்சும் கூடிய ஆடுகளத்தில் தடுமாறியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்னில் அடங்கியது. இந்த குறைவான இலக்கை கொண்டும் எதிரணிக்கு இந்தியா கடும் குடைச்சல் கொடுத்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனால் கடைசி கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (47 ரன்) நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை 19-வது ஓவரில் கரைசேர்த்தார்.

    தற்போதைய ஆட்டம் நடக்கும் செஞ்சூரியன் ஆடுகளத்திலும் 'வேகம்' கைகொடுக்கும். ஆனால் பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணித்து ஆடினால் ரன்வேட்டை நடத்தலாம். இரு ஆட்டத்திலும் (7 மற்றும் 4 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் நடப்பு தொடரில் இதுவரை 2 ஓவர் மட்டுமே பந்து வீசியிருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக யாஷ் தயாள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    தென்ஆப்பிரிக்க அணியினர் முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். அந்த அணியில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்க்ரமிடம் இருந்து இன்னும் அதிரடி வெளிப்படவில்லை. அவர்கள் மிரட்டினால் தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் வலுவடையும். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. இந்த முறையும் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளனர்.

    இந்திய அணி இங்கு 2018-ம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி இருக்கிறது. அதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    மொத்தத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கே தொடரை வெல்லும் வாய்ப்பு உருவாகும் என்பதால் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது யாஷ் தயாள், அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

    தென்ஆப்பிரிக்கா: ரையான் ரிக்கெல்டன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அன்டில் சிம்லேன் அல்லது லுதோ சிபம்லா, ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், இன்கபா பீட்டர்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
    • அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது.

    அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 111 ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் களத்தில் இருந்த ரியான் பராக் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து சிக்சர் மழை பொழிந்தனர். 13 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 47 ரன்கள் குவித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது இந்திய அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.

    • இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது.
    • சாம்சன் - சூர்யகுமார் ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர்.

    அதிரடியாக விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.

    இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறது.

    • 2-வது டி20 போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் அடித்துள்ளது. மேலும் அந்த அணிக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர்.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும். 

    • இளம் வயதில் அரை சதம் விளாசிய இந்தியர்களில் ரோகித் முதல் இடத்தில் உள்ளார்.
    • அடுத்த 2 இடங்களில் திலக் வர்மா, ரிஷப் பண்ட் உள்ளனர்.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் (21 வருடம் 227 நாட்கள்) சாதனையையும் நிதிஷ் ரெட்டி (21 வருடம் 136 நாட்கள்) முறியடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ரோகித் சர்மா (20 வருடம் 143 நாட்கள்), திலக் வர்மா (20 வருடம் 271 நாட்கள்), ரிஷப் பண்ட் (21 வருடம் 38 நாட்கள்) உள்ளனர்.

    • ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது.
    • அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.

    ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் எந்த நாடு நடுத்தும் என்ற தகவலும் எந்த வடிவத்தில் நடக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    அதன் விவரம்:-

    2025 - இந்தியா (டி20 ).

    2027 - பங்களாதேஷ் (ஒருநாள்).

    2029 - பாகிஸ்தான் (டி20 ).

    2031 - இலங்கை (ஒருநாள்).

    • ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.
    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

    வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன், ஆல் ரவுண்டர் வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். இதுவரை வங்கதேசம் கிரிக்கெட் அணிக்காக 129 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷகிப், அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

    ஓய்வு குறித்து பேசிய ஷகிப், "புதிய வீரர்களை கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 கிரிக்கெட்டிற்கும் இது பொருந்தும். இது குறித்து தலைமை தேர்வுக் குழு தலைவர் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அனைவருமே, இது தான் கடந்து செல்லவும், புதிய வீரர்கள் வருவதற்கும் சரியான தருணமாக இருக்கும் என்று உணர்ந்தோம்," என்று தெரிவித்தார்.

    37 வயதான ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடுகிறார். இந்த போட்டி வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள வங்காள தேசிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

    • 500-வது போட்டியில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்.
    • 500 போட்டிகளுக்கு மேல் விளையாடிவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பொல்லார்ட் உள்ளார்.

    கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களை சேர்த்தார். இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சிறப்பு சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

    அதன்படி இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் டேவிட் மில்லர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 500-வது டி20 போட்டியில் விளையாடினார். இதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையை டேவிட் மில்லர் பெற்றுள்ளார்.

    அவருக்கு முன்,கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, சோயப் மாலிக், சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் உள்ளனர்.

    • டிராவிஸ் ​​ஹெட் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தி இருந்தார்.
    • டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வீரர் பவர்பிளேவில் அதிக பவுண்டரிகளை விளாசியது இதுவே முதல்முறையாகும்.

    ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரைசதத்தை கடந்த டிராவிஸ் ஹெட், டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையை படைத்து அசத்தி உள்ளார்.

    அதன்படி இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் பவர் பிளே ஓவர்களில் மட்டுமே 73 ரன்களைக் குவித்திருந்தார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங்ஸ் பவர்பிளே ஓவர்களில் 67 ரன்களைக் குவித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது டிராவிஸ் ஹெட் முறியடித்துள்ளார்.

    இது தவிர, டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்த சமயத்தில் பவர்பிளே ஓவரில் மட்டும் 16 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதன்மூலம் ஆடவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வீரர் பவர்பிளேவில் அதிக பவுண்டரிகளை விளாசியது இதுவே முதல்முறையாகும்.

    முன்னதாக, கடந்த 2018 -ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் பவர்பிளேயின் போது 14 பவுண்டரிகளை அடித்து முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் கொலின் முன்ரோவை ஹெட் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    மேற்கொண்டு இந்த இந்த இன்னிங்ஸின் போது டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தி இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்த முதல் வீரர் எனும் மார்கஸ் ஸ்டொய்னிஸின் சாதனையை ஹெட் சமன்செய்துள்ளார். முன்னதாக, கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில், இலங்கைக்கு எதிராக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டர்ஹாம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து விளையாடிய சர்ரே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இறுதியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில் இப்போட்டியில் சர்ரே அணியின் விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்டுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. டாம் கரன் வீசிய வைட் யார்க்கர் பந்தை பாஸ் டி லீக் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் ஓட முயற்சித்தார். அப்போது அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்து வில் ஜேக்ஸ் அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் பேட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பாதி களத்தில் நிற்க, வில் ஜேக்ஸ் பந்தை விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸிடம் த்ரோ அடித்தார். ஆனால் பந்தை சரியாக பிடிக்க தவறிய நிலையில், தனது கைகளால் மட்டுமே ஸ்டம்பினை தகர்த்தார். பிறகு அவர் தனது தவறை உணர்ந்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்த நேரத்தில், ஜோன்ஸ் பாதுகாப்பாக தனது கிரீஸிற்கு திரும்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×