என் மலர்
நீங்கள் தேடியது "3 lakh seized"
விளாத்திகுளம்:
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் விளாத்திகுளம் விலக்குப்பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பந்தல்குடியில் இருந்து காமநாயக்கன்பட்டி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. இதனை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காமநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் தேவசகாயம் என்பதும் அவரது மோட்டார் சைக்கிளில் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரத்து 500 இருந்ததும் தெரியவந்தது. இதற்கு முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் முறையான ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
ராமநாதபுரம்:
கீழக்கரை அருகே திருப்புல்லாணி செக் போஸ்ட் மெயின் ரோட்டில் ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் முரளிதரன் தலைமையில் இன்று காலை வாகன சோதனை நடந்தது.
அப்பேபாது ராமேசுவரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.53,600த்தை பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கீழக்கரை முத்துசாமிபுரம் முருகன் மகன் கண்ணன்(வயது 36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் கோபால் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி குழுவினர், திருப்புல்லாணி செக் போஸ்டில் மேற் கொண்ட சோதனையில், கேரளாவில் இருந்து மீமிசல் நோக்கி சென்ற வாகனத்தில் ரூ.77 ஆயிரம் இருந்தது.
சரியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கைப்பற்றி வண்டியின் ஓட்டுநர் மீமிசல் அய்யப்பன் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அந்த வழியாக வந்த ஏர்வாடி அருகே உள்ள சடைமுனியன்வலசையைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துக்குமார் என்பவரின் காரை சோதனை செய்தனர்.
அப்போது அவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சத்திரக்குடி டோல்கேட்டில் பறக்கும் படை அலுவலர் பானுபிரகாஷ் சோதனை நடத்தினார். அப்போது காரில் வந்த நாகநாதபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராவூத்தர் கனி (30) என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LSPolls