search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "34 months"

    • சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.
    • மதுரையில் 34 மாதங்களில் 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகரில் மதுரை டவுன், மதுரை தெற்கு, தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேற்கண்ட 4 காவல் நிலையங்களிலும் சிறுமிகளுக்கு எதிராக பதி வான போக்சோ வழக்குகள் தொடர்பாக புள்ளி விவர பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 132 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்குகளும், 2022-ம் ஆண்டு அக்டோபர் வரை 150 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    அதாவது கடந்த 34 மாதங்களில் மட்டும் மொத்த மாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த 5-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது.

    எனவே அவர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் சில்மிஷம் தொடர்பாக குழந்தைகள் ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×