search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3rd zone irrigation"

    • திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது.
    • அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டல பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றுடன் பாசன காலம் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என பி.ஏ.பி., விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திருமூர்த்தி நீர் தேக்க முன்னாள் திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் முன்னாள் பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் தேவராஜனை சந்தித்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இது குறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

    வருகிற 28ந் தேதி தண்ணீர் திறந்து நான்கு சுற்றுகளாக தண்ணீர் வினியோகிக்க வேண்டும். மொத்தம் 7,600 மில்லியன் கனஅடி நீர் வினியோகிக்க வேண்டும். இதன் வாயிலாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 94,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×