என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றார்.
    • கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கண்டனங்கள் வந்தன.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி மீது காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    தேவைப்படும் நேரத்தில், 'கயாப்' (காணவில்லை) என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பகிர்ந்த மோடியின் தலையில்லாத கேலிச் சித்திரம் வைரலாகியது.

    காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமஷ் , சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை விமர்சித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றதாக அவர் விமர்சித்தார்.

    இதற்கிடையே காங்கிரஸ் பகிர்ந்த கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கடுமையான கண்டனங்கள் வந்தன. பாஜக இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக்கிய நிலையில் காங்கிரஸ் தனது பதிவை நீக்கியுள்ளது. 

    • உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.
    • சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பா.ஜ.க. சேர்ந்த உமாசங்கர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

    அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    உமாசங்கரின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை 4 முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் 26-ந் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார்? ஏன் காவல்துறை விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுகிறது.

    உமாசங்கர் புகாருக்கு லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. இது திட்டமிட்ட படுகொலை. இதில் அரசியல் பின்னணி உள்ளது. போலீசாரிடமும், முதலமைச்சரிடமும் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    இதில் புதுச்சேரி போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது. ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் தலையீட்டால், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ரவுடிகள் வைத்து வழக்கை பூசிமுழுக பார்க்கிறார்கள். இந்த சூழல் தொடர்ந்தால் அரசியல் தலைவர்கள் யாரும் புதுச்சேரியில் நடமாடமுடியாது.

    பா.ஜ.க.வில் இருப்போருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்? முன்பு நடந்த செந்தில்குமார் கொலைக்கு உள்துறை அமைச்சரை பதவிவிலக கோரினோம். தற்போது நடந்த கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்.

    போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதால் சி.பி.ஐ. விசாரணை தேவை. கவர்னர் கைலாஷ்நாதன் இதில் தலையிட்டு சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக கவர்னரை சந்திப்போம்.

    உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு பா.ஜ.க. சென்றார். பா.ஜ.க. யார் வேலை செய்கிறார்களோ, வேட்பாளராக முயற்சிக்கிறார்களோ அவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அத்துடன் நிலப்பின்னணி பெரியளவில் இருக்கிறது.

    சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும். இல்லாவிட்டால் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் வழக்கை முடித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்?

    சென்னை:

    முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று பாரதிதாசன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மின் தடை நிலவுகிறது. எங்கள் பகுதியில் இரவில் மட்டும் 3 முறை மின்தடை ஏற்பட்டது. முன்பெல்லாம் பகலில் ஓடிய அணில்கள் இப்போது இரவிலும் ஓடுகிறது. மின் துறை, மருத்துவ துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இல்லாத தடைகளை எல்லாம் சொல்லி தாண்டி கொண்டிருப்பது போல் கூறுகிறார்கள். முதலில் மின்தடையை நீக்குங்கள்.

    தி.மு.க. அரசு எல்லா துறைகளிலும் தோற்று வருகிறது. இப்போது மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்கள். 1969-லேயே முதலமைச்சரின் அப்பா மரியாதைக்குரிய கலைஞர் முதல்வராக இருந்த போது மாநில சுயாட்சிக்காக ராஜ மன்னார் கமிட்டி அமைத்தார்கள். அந்த பரிந்துரையை தி.மு.க.வே பின்பற்றவில்லை. காரணம் அப்போது காங்கிரசுக்கு தி.மு.க. அடிமையாக இருந்தது. இப்போதும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்.

    தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு தான். பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள். உண்மையில் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி வருவது தி.மு.க. தான். பாரதியை கொண்டாடியவர் பாரதிதாசன். இன்று பாரதிதாசனை கொண்டாடும் நீங்கள் பாரதியை கொண்டாடதது ஏன்? கம்பனை கொண்டாடதது ஏன்? தமிழிலும் வேற்றுமையை விதைத்தீர்கள். இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்? வக்பு வாரியம் மூலம் அப்பாவி ஏழைகளின் பணம் சுருட்டப்படுகிறது. வக்பு பணம் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உண்மையை உணர்ந்த மக்கள் இதை முறியடிப்பார்கள். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்கிறார்கள். உங்கள் கூட்டணி நிலையை பாருங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திருமாவளவன் நிலை என்ன என்பதை பாருங்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.

    விஜய் இப்போதான் பூத் கமிட்டி கூட்டத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு தான் அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    பாரதிதாசன் கவிதையில் 'செந்தாமரை காடு பூத்தது' என்று ஒரு வரி உண்டு. அதே போல் தாமரை பூத்த தமிழ்நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.
    • அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இந்தப் பின்னணியில் அமலாக்கத்துறை தொடுக்கிற வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகின்றன. இதில் தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதன்மூலம் அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில் டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
    • இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில்," தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்றார்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடி பொருள் எதுவும் வீசப்பட வில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில பாஜக கட்சியின் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன். இவர் முன்னாள் மாநில தலைவர் சுரேந்திரனின் மனைவி ஆவார். இவர்களது வீடு திருச்சூர் அய்யந்தோல் பகுதியில் இருக்கிறது.

    இங்கு நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் கட்சியினர் அங்கு குவிந்தனர். யாரோ வெடிபொருட்களை வீசிச் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    இதில் ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடி பொருள் எதுவும் வீசப்படவில்லை. அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்து உள்ளனர் என தெரிய வந்தது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததில்லை என்ற போதிலும் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும்.
    • 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம்.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் வாரம்தோறும் திண்ணை பிரசாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11-வது வாரமாக திண்ணை பிரசாரம் தொடர்ந்து வருகிறது.

    இன்று விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்பது போன்ற அவலங்களில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணை பிரசாரம் நடத்துகிறோம்.

    இந்த திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். 200 தொகுதிகளில் அ.தி.மு.க. வெல்வது நிச்சயம். சட்டசபையில் ஆளும் கட்சியினர் நேரலையில் பேசினால் தொழில்நுட்ப கோளாறு வருவதில்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் உடனே தொழில்நுட்ப கோளாறு வருகிறது. இது பாரபட்சமான நடவடிக்கை.

    எடப்பாடி பழனிசாமி என்ன கேள்வி கேட்கிறார், என்ன மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார் என்று மக்களுக்கு தெரிந்தால்தான் அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.

    ஊமை படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள். வடக்கு எது, கிழக்கு எது, தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார், 'உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்' என்றார்.

    • பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி, "ஹமாஸ் போன்ற தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை உதாரணமாக கூறி அதே மாதிரி பதிலடி கொடுக்கப்படும் பாஜக தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.
    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். இதன்பின்னர் பேசிய திருமாவளவன்,

    திமுகவில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே கேலி பேசுகிறார்கள். பாஜக, பாமக கட்சியுடன் கூட்டணி இல்லை. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.

    இப்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜயுடன், புத்தக வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த போது, அது தவறான யூகத்தை ஏற்படுத்தும் என்றும், இப்போது உள்ள அணி பாதிக்கப்பட்டு அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்பதால் அந்த விழாவைக்கூட தவிர்த்தேன். அவருடைய மனது நம்முடன் இருக்கும் என்று அப்போது விஜய் கூறினார். நான் நினைத்திருந்தால் விஜய்க்கான கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று கூறியிருக்க முடியும். ஆனால் அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது என்றார்.

    • கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
    • 1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தமிழக சட்டசபையில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் இன்றும், தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.

    இதற்கு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் (கலைஞர்) சொன்னதுதான் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

    1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

    • பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர்.
    • இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் அஞ்சலில் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தி வருகிறது.

    அவ்வகையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒய்.எஸ்.சர்மிளா, "பஹல்காம் தாக்குதல் நமது நாட்டின் மீதான தாக்குதல். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். பாதுகாப்பு அமைப்பின் குறைபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்த விஷயத்தை ஒரு மதத்தின் மீது தாக்குதல் என்று பாஜக தவறாக சித்தரிக்கிறது. அதன் துணை அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம் இதே பணியில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் வேதனையானது.

    இறந்தவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர். இது மதத்தின் மீதான தாக்குதல் அல்ல. இந்தியா மீதான தாக்குதல். இது ஒரு மதத்தின் மீதான தாக்குதல் என்று பாஜக கூறுகிறது. இது ஒரு வேதனையான விஷயம். நாட்டில் மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" பதிவிட்டுள்ளார்.

    • வெடிபொருள் வீசப்பட்ட தகவலறிந்ததம், சம்பவ இடத்தில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில பாஜக கட்சியின் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன். பாஜகவின் கேரள மாநில முன்னாள் தலைவராக இருந்த சுரேந்திரனின் மனைவி ஆவார். இவர்களது வீடு திருச்சூர் அய்யந்தோல் பகுதியில் இருக்கிறது.

    இவர்களது வீட்டின் அருகே நேற்று இரவு ஏதோ வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள், வெடிபொருளை வீசியுள்ளனர். இதனால் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

    வெடிபொருள் வீசப்பட்டபோது ஷோபா சுரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது வெடிபொருள் வீசப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். ஷோபா சுரேந்திரன் வீட்டின் அருகே வீசப்பட்ட வெடிபொருள் எந்த வகையை சேர்ந்தது? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனை வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வெடிபொருளை வீசிச் சென்ற மர்மநபர்களை அடையாளம் காணுவதற்காக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடிபொருள் வீசப்பட்ட தகவலறிந்ததம், சம்பவ இடத்தில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ×