என் மலர்
நீங்கள் தேடியது "Coonoor Municipality"
- கவுன்சிலர் சுசீலா போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
- சுசீலா, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரசபையில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 22 பேரும், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-6, சுயேச்சை-1 என கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகரசபை தலைவராக 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக ஷீலா கேத்தரின் பதவிவகித்து வந்தார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து நகரசபை தலைவர் பதவியை நிரப்புவதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நகரசபை தலைவர் பதவிக்கு 16-வது வார்டு கவுன்சிலர் சுசீலா போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுசீலா, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார். தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சுசீலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டார். இன்று காலை நகரசபை தலைவர் தேர்தல் ஆணையாளர் சசிகலா தலைமையில் நடந்தது. தலைவர் தேர்தலில் போட்டியிட சுசீலா வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சுசீலா, நகரசபை தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுசீலாவிடம் ஆணையாளர் வழங்கினார். நகரசபை தலைவர் சுசீலாவின் கணவர் முருகேசன், குன்னூர் நகர தி.மு.க. துணை செயலாளராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.