search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Govt"

    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை.
    • திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    உண்மையில் சாலைமறியல் செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதலும், அவமதிப்பும் ஆகும்.

    நவம்பர் -திசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த திசம்பர் 3-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் பேச்சு நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி அப்போதே கூறியிருந்தாலும் கூட அதிகாரிகள் பெயரில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால், தங்களை நியாயவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வெளியில் அறிவித்து விட்டு, அதிகாரிகளின் பெயரில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய முயன்றதும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரப்பட்டதும் தான் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் போது அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக பல வாரங்கள் கழித்து அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார்.

    • பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.
    • பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்பவர், தமிழக அரசு வழங்கிய இலவச சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், மாளவிகாவின் எக்ஸ் தள பக்கத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    • புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்
    • www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

    மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் குழு அறிவித்துள்ளது.

    www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 15 நாட்களில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • அப்போது, மக்களுக்கு பணியாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்தார்.

    சென்னை:

    கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    என்னையும், உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் தி.மு.க.வையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. உணர்வோடும் உற்சாகமாகவும் கொண்டாடக் கூடிய பண்டிகை தான் இந்த பொங்கல்.

    நம்முடைய ஆட்சி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும், அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 முறை கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டோம். 6-வது முறை என் தலைமையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். 7-வது முறையும் ஆட்சிக்கு நாம்தான் வருவோம் என்று சொல்லி இருக்கிறேன்.

    உறுதியாக சொல்கிறேன்... மக்களுக்கு பணியாற்றவே, தொண்டாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன் என தெரிவித்தார்.

    • எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
    • நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் சம்பா-தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    உழவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்கள் சாகுபடி செய்த நெல்லுக்கு ஓரளவாவது நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உழவர்களை காத்திருக்க வைக்காமல், அவர்களிடம் மூட்டைக்கு ரூ. 50 வீதம் கையூட்டு கேட்டு கொடுமைப்படுத்தால் நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    • இந்த மாதம் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மொத்தமுள்ள 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து விட்டது. இந்த தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் திடீர் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கிடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10-ந்தேதியே ரூ.1,000 வரவு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    ஆனால் இந்த மாதம் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ந்தேதி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. 13-ந்தேதி ஒரு நாள் மட்டுமே உள்ளது. அது பொங்கலுக்கு முந்தைய தினம்.

    எனவே தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்கி விடலாம் என முடிவு எடுத்துள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு, இந்த மாதம் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படுகிறது.

    • தமிழகம் முழுவதுமே, சுகாதாரத்துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது.
    • தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, அவசர சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர், மருத்துவர் இல்லாததால், முதலுதவி கூடக் கிடைக்காமல் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே, சுகாதாரத்துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால், போதிய அளவு மருத்துவர்கள் நியமனம் செய்யாமல் இருப்பது தான். தமிழகம் முழுவதும், 1,467 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

    அனைத்து அரசுத் துறைகளிலுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் உயிருக்குப் பொறுப்பான சுகாதாரத் துறையில் கூட, போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பது, அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை, எளிய பொதுமக்கள் உயிரை திமுக அரசு கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

    தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கவனிப்பதை விட, சுகாதாரத் துறையில் அப்படி என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்? உயிர்கள் பலியான பிறகு, நீங்கள் ஆடும் நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என்று கூறியுள்ளார். 



    • முஸ்லிம்கள் தர்காவில் வழிபாடு செய்ய போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் தடை விதித்துள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • முஸ்லிம்கள் வழக்கம்போல் வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை.

    சென்னை:

    மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில், "இது முற்றிலும் பொய்யான செய்தி. திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம்கள் தர்காவில் வழிபாடு செய்ய போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் தடை விதித்துள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அங்கு முஸ்லிம்கள் வழக்கம்போல் வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை என்று திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
    • படித்த இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனியாவது திராவிட மாடல் அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறித்த விவரங்களை இரு அமைப்புகளும் இன்னும் வெளியிடவில்லை. அரசு பணிகள் குறித்த அறிவிப்புகளுக்காக ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் காத்துக்கிடக்கும் நிலையில் அரசு பணிகள் குறித்த விவரங்களை திட்டமிட்டே வெளியிடாமல் அரசு தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை ஓர் ஆண்டில் எத்தனைப் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கைகளை வெளியிடவுள்ளன, அவை எந்தெந்த தேதிகளில் வெளியிடப்படும், அவற்றின் மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த உத்தேசத் திட்டம் அதற்கு முந்தைய ஆண்டின் திசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். அத்தகைய ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடப்பாண்டில் 7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படும் என்று கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியே அந்த அமைப்பு அறிவித்தாலும் கூட ஒவ்வொரு போட்டித் தேர்வின் மூலம் எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்? என்பது குறித்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

    தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 வகையான பணிகளுக்கு மட்டுமே போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் 15-க்கும் கூடுதலான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2023-ஆம் ஆண்டில் இது 12 ஆக குறைந்தது, 2024-ஆம் ஆண்டில் இது 8 ஆக சரிந்தது. நடப்பாண்டில் வெறும் 7 போட்டித்தேர்வுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு கோரி 1.30 கோடி படித்த இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது நியாயமல்ல.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 10,375 ஆசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் கூட நடப்பாண்டில் நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. அந்த லட்சனத்தில் தான் அரசும், தேர்வு வாரியமும் செயல்பட்டு வருகின்றன.

    திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசு பணிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்கு பெரும் துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது.

    படித்த இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனியாவது திராவிட மாடல் அரசு கைவிட வேண்டும். உண்மையில் தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் கூடுதலான அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றாலும் கூட, நடப்பாண்டில் குறைந்தது 2 லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான ஆள்தேர்வு அறிவிக்கைத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை உடனடியாக வெளியிட வேண்டும்.! என்று கூறியுள்ளார்.

    • காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
    • விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். 

    • பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் யார் யாருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து, குறிப்பிட்ட ஊதிய விகிதங்களின்படி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும்; மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அதாவது 1.10.2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,

    சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் அல்லது துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிடுகிறது.

    இந்த அரசாணை தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, 2.1.2025 நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

    உலேமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித் தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள், பணியில் இருக்கும் பணியாளர்களுக்குப் பொருந்தக்கூடிய தற்காலிக மிகை ஊதியம் (தற்காலிக போனஸ்) பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்,

    'ஏ' மற்றும் 'பி' பிரிவு பதவிகளில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்பட ஓய்வூதிய முன்னோடித் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும்.
    • முழு விளக்கத்தையும் அமைச்சர் தர வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் சங்கத்தின் துவக்க விழாவில், தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானத்திற்கு வரவேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தேமுதிக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றான அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில கல்வி உரிமைகலைப் பாதுகாத்திடும் அரசாக இந்த அரசு இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சாப்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார்ப் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார்ப் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப்பள்ளிகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

    அரசு பள்ளிகளைத் தனியார் மயமாக்கப்படும் என்பது வீணான வதந்தி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சப்பை கட்டுக் காட்டினாலும் இதன் உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இல்லை என்றால் இந்த வதந்தி உண்மையாகக் கூடும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கான முழு விளக்கத்தையும் அமைச்சர் தர வேண்டும். எனவே தமிழக அரசு தனியார்ப் பள்ளிகளின் தரத்திற்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    ×