என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aani thiruvizha"
- இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
- கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.
நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.
இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- நாக கன்னியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- அம்மனுக்கு பாலாபிஷேம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கும்பகோணத்தில் காளியாபிள்ளை தெருவில் நாகக்கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி நாகக்கன்னியமனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நடந்தது. முன்னதாக கும்பகோணம் பகவத் அரசாற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், வேல், காவடி, அலகுகாவடி, பால் குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தெரு மக்கள் செய்திருந்தனர்.
- 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார்.
- விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.
நெல்லையப்பர் கோவில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இன்று காலை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேரோட்டம் தொடங்கியது. பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சந்திரசேகர், கிட்டு, உலகநாதன், 25-வது வார்டு வட்ட செயலாளர் டவுன் பாஸ்கர், சுற்றுச்சூழல் அணி அமிதாப், நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்காலிக கழிப்பிடங்கள், மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடங்கள், வாகன நிறுத்தங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையா் கவிதா பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலா் அய்யர் சிவமணி மற்றும் நிா்வாக அதிகாாிகள் செய்திருந்தனா்.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாகம் தீர்க்கவும், பசியாற்றவும் தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர். பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர்.
சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது. திருவாரூர் ஆழித்தேர் உயரத்தில் அதிகம் என்றாலும் முழுக்க முழுக்க மூங்கில் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ஹிட்டாச்சி எந்திரங்களும், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு இழுக்கப்படுகிறது. உயரத்தில் 2-வது பெரிய தேரான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தேர் மூங்கில் பிரம்புகள் மற்றும் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சச எந்திரங்கள் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லையப்பர் தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் மட்டுமே இழுக்கப்படுகிறது. தேர் இழுக்க 300 அடி நீளத்தில் 4 வடம் பயன்படுத்தப்படுவதுடன், தேர் திரும்பவும், தேரை நிறுத்தவும் சறுக்கு கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
- சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது.
- வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணம் பாடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
7-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து பல்லக்கு சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இரவில் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியருக்கு சோடஷ உபசார தீபாராதனை நடந்தது.
பின்னா் பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்களவாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனா். தொடர்ந்து சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது. கோவிலில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பாம்பே சாரதாவின் பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி கோலத்திலும், பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு தேர் கடாட்ச வீதி உலாவும், சுவாமி தங்ககைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, படப்பு தீபாராதனையும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 8 மணிக்கு வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். இதையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கோவில் பகுதியில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம் நடத்தப்பட்டது.
- தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது.
இதையொட்டி மாலையில் அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடைசூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
- 7-ந்தேதி பரிவேட்டை நடக்கிறது.
- 10-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவில் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- நாளை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார்.
- தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
நேற்று 6-வது நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி, டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் திருவிழாவில் மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார். இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேரை பார்வையிட்டு, தொடர்ந்து வீதி உலா செல்கிறார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணி அளவில் சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளுகிறார்கள். காலை 7.30 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்காக தேர்களை தயார் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
- தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.
- நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடக்கிறது
விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்திதேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.
பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகனங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
கோவில் நின்ற சீர்நெடுமாறன் கலையரங்கத்தில் ஆன்மிக பக்தி சொற்பொழிவு, பேராசிரியர் ஞானசம்பந்தனின் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது. தேர் இழுப்பதற்கான வடம், லோடு ஆட்டோகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு, தேரில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
- இன்று இரவு சுவாமி-அம்பாள் வீதிஉலா நடக்கிறது.
- தேரோட்டம் 2-ந்தேதி நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்.
மேலும் பக்தி இசை, பரதநாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் இரவில் பாடகி மகதியின் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். டவுன் ரதவீதிகளில் வந்து, மாநகராட்சி சார்பில் தேரோட்டம் அன்று செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
- 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
2-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இரவில் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திரதேவருக்கு சோடச உபசார தீபாராதனையும், தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடந்தது.
பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.
நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நந்தினியின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், பிரியா பிரபுவின் பக்தி சொற்பொழிவும், பார்கவி சந்திரசேகரின் பக்தி இன்னிசையும், தாமிரசபை நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தாமோதர தீட்சிதரின் இன்னிசை சொற்பொழிவும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேர் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.
தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் கூண்டுகளை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று தேரில் சாரம் கட்டி சீரமைக்கும் பணி நடைபெற்றது. சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதபடி வேலியிட்டு காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் ஏற்பட்டது.
புண்ணிய திருத்தலத்தலமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தோ்த் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான 517-வது ஆனிபெருந்தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திரதேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.
நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றிவர, ஆனிப் பெருந்திரு விழாவின் பூர்வாங்க பூஜைகளில் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடி மரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் கிட்டு, உலகநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மீக கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியாக, ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற் பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வட மொழியில் இந்த மாதத்தை ‘ஜேஷ்ட மாதம்’ என்று அழைப்பார்கள்.
- இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
ஆனி மாதம் பல விரத சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனி மாதத்தில் சில ஆலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றி இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்..
உத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக, ஆனி மாதம் விளங்குகிறது. இது தேவர்களின் மாலைப் பொழுது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. பூலோகத்தில் இந்த மாதத்தில் இளவேனிற் காலமாக இருக்கும். கோடையின் தாக்கம் நீங்கி, இதமான காற்று வீசும் மாதம் இது. ஆனி மாதம் பல விரத சிறப்புகளை உள்ளடக்கியது. வட மொழியில் இந்த மாதத்தை 'ஜேஷ்ட மாதம்' என்று அழைப்பார்கள். இதற்கு 'மூத்த' அல்லது 'பெரிய' என்று பொருள். இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனி மாதத்தில் சில ஆலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றி இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்..
ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, மாலை வேளையில் நடராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை 'ஆனி திருமஞ்சனம்' என்று அழைப்பார்கள். அன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடோறும்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அன்று, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படும்.
சில ஆலயங்களில் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. திருச்சி அருகே உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், அன்றைய தினம் மாம்பழ அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் கூடை கூடையாக மாம்பழங்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள். அதைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் அந்த மாம்பழங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
புதுச்சேரி அருகே உள்ள காரைக்காலில், காரைக்கால் அம்மையாருக்கு தனிக் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி 4 நாட்கள் விழா நடைபெறும். அதில் பவுர்ணமி அன்று, மாங்கனித் திருவிழா விசேஷமானது. அன்றைய தினம் காரைக் கால் கயிலாசநாதர் மற்றும் அம்பாளுடன், காரைக்கால் அம்மையாரின் திருவுருவச் சிலையும் ஊர்வலமாக கொண்டுவரப்படும். அந்த பகுதியில் உள்ள அனைவரும் வீட்டின் மாடியில் நின்றபடி மாம்பழங்களை அம்மையை நோக்கி வீசி வழிபாடு செய்வார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி தினத்தன்று, சுவாமிக்கு வாழைப்பழ தார்களை கொண்டு வந்து காணிக்கை யாக சமர்ப்பித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. தங்களின் குடும்பம் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று எண்ணும் மக்கள், இப்படி வாழைத் தார்களை கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்கிறார்கள். வழிபாட்டின் முடிவில் இந்த வாழைப் பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்