என் மலர்
நீங்கள் தேடியது "Adani-Wilmar"
- ஃபார்சூன் பிராண்ட் சமையல் எண்ணெய் இந்தியா முழுவதும் பிரபலமானது
- அதானி-வில்மர் நிறுவனத்தில் அதானி குழுமத்திற்கு சுமார் 44 சதவீத பங்கு உள்ளது
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை மையமாக கொண்டு முன்னணி தொழிலதிபரும், கோடீசுவரருமான கவுதம் அதானி என்பவரால் 1988ல் தொடங்கப்பட்டது அதானி குழுமம் (Adani Group).
இக்குழுமம் துறைமுக கட்டுமானம், மின்சார உற்பத்தி/பகிர்மானம், எரிசக்தி, சுரங்கம், விமான நிலைய செயல்பாடு/நிர்வாகம், இயற்கை எரிவாயு, உணவுப்பொருள் தயாரிப்பு, நாட்டின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.
அதானி குழுமத்தை சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் இன்டர்நேஷனல் (Wilmar International) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானது, அதானி வில்மர் (Adani Wilmar). சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களில் நாடு முழுவதும் பிரபலமான "ஃபார்சூன்" (Fortune) எனும் பெயரில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில், அதானி குழுமத்திற்கு 43.97 சதவீதம் பங்கு உள்ளது.
இந்நிலையில், தனது பிற முக்கிய தொழில்களில் கவனம் செலுத்துவதற்காக அதானி வில்மர் குழுமத்தில் உள்ள தனது முழு பங்கையும் விற்று விட பல பன்னாட்டு நிறுவனங்களுடன் அதானி குழுமம் முயற்சிப்பதாகவும், ஒரு மாத காலத்தில் இந்த விற்பனை முடிவாகி விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பங்கு விற்பனை உறுதியானால், இதன் மூலம் அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ($3 பில்லியன்) மேல் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரு காலாண்டுகளாக அதானி வில்மர் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விற்பனை மந்தமானதால், நிகர லாபம் பெரிதும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய மும்பை பங்கு சந்தை குறியீட்டில் அதானி வில்மார் நிறுவனத்தின் பங்குகள் ரூ.317 எனும் அளவில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன் ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ பொருளாதார புலனாய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் மீது பல்வேறு ஊழல் புகார்களை குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.