search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk member arrested"

    • இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது.
    • கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    திருவெற்றியூர்:

    திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). அ.தி.மு.க. மேற்கு பகுதி மாணவரணி செயலாளரான இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் உள்ளார்.

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இளம்பெண் ஓ.எம்.ஆர்.சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் கோகுலகிருஷ்ணனுடன் பழகுவதை தவிர்த்தார். அவரிடம் பேசவில்லை என்று தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த கோகுல கிருஷ்ணன் கடந்த 21-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சாத்தாட்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணை பாண்டிச்சேரியில் உள்ள ஒட்டலில் கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர். மேலும் கோகுலகிருஷ்ணனை கைது செய்து சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    இதில் இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    • பாதிக்கப்பட்ட மார்கரேட் ஜெனிபர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு வீரமலையை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர். இவர் நர்சிங் படிப்பு முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2021 ஆண்டில், அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக சொல்லி கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த லாசர், தேனீர் பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. திருவெறும்பு தெற்கு ஒன்றிய பொருளாளர் (எடப்பாடி அணி) வீரமலை, சூரியூரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் மார்கரேட் ஜெனிபரிடம் ரூ.4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட மார்கரேட் ஜெனிபர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாசரை கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய சுப்ரமணியும், வீரமலையும் கைதாகாமல் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் அவர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்பட்டது. இந்த நிலையில் மார்கெட் ஜெனிபர், திருச்சி ஐஜி, டிஐஜி, எஸ்.பி, மற்றும் திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஆகியோரிடம் மீண்டும் புகார் மனுகொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு வீரமலையை கைது செய்தனர். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றொரு அ.தி.மு.க. நிர்வாகியான சுப்பிரமணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஏமாற்றம் அடைந்த ரேவதி மோசடி குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 47) அ.தி.மு.க.வில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.

    இவர் ரங்காபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சக்திவேலன் மனைவி ரேவதி என்பவரிடம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதற்காக ரூ‌.8 லட்சத்து 25 ஆயிரம் கேட்டுள்ளார். அதன்படி ரேவதி சுகுமாரிடம் பணம் கொடுத்தார்.

    ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு சுகுமார் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்தார்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த ரேவதி இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    இதில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் சுகுமாரை கைது செய்தனர்.

    மோசடி வழக்கில் அ.தி.மு.க பிரமுகர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுகுமார் ஏற்கனவே பணத்தகராறில் தலைமறைவாக இருந்தார். அப்போது தற்கொலை செய்யப்போவதாக அவர் செல்போனில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வு எழுதிய மாரிச்சாமி முதல் கட்டமாக ரூ.8.20 லட்சம் தந்தார். ஆனால் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
    • ஆத்மா சிவக்குமார் போல் மேலும் சிலரிடம் ஆத்மா சிவக்குமார் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.

    கோவை:

    ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பொன்மேட்டை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது34). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மாரிச்சாமி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

    இவருக்கு கோவை கவுண்டம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்கிற ஆத்மா சிவக்குமார் (53) என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது. இவர் அ.தி.மு.க பிரமுகர்.

    தனக்கு அ.தி.மு.க அமைச்சர்களாக இருந்த சிலரிடம் நல்ல நட்பு இருக்கிறது. அரசு துறையில் பல்வேறு பதவிக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியும். குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர், மின் வாரிய பணிகள், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி உட்பட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவேன் எனக்கூறி உள்ளார். இதனால் மாரிச்சாமிக்கு, ஆத்மா சிவக்குமார் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து மாரிச்சாமி, ஆத்மா சிவக்குமாரிடம் கிராம நிர்வாக அலுவலர் பணி கேட்டுள்ளார். அவர் கடந்த 2016-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்தார். தேர்வு எழுதினால் போதும் ரூ.10 லட்சம் கொடுத்தால் வேலை கிடைத்து விடும் என ஆத்மா சிவக்குமார் கூறினார்.

    தேர்வு எழுதிய மாரிச்சாமி முதல் கட்டமாக ரூ.8.20 லட்சம் தந்தார். ஆனால் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இவரை போல் மேலும் சிலரிடம் ஆத்மா சிவக்குமார் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த 68 பேர் இதுவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்தாரர்களிடம் மட்டும் இவர் ரூ.2.17 கோடி வாங்கியிருப்பது தெரியவந்தது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் இவர் அ.தி.மு.க நிர்வாகி என சொல்லி வேலை வாங்கி தருவதாக 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பதாக தெரிகிறது. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் பெயரிலும் இவர் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இவரிடம் ஏமாந்த நபர்கள் பணத்தை வாங்க பல முறை முயற்சி செய்தும் முடியாமல் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க குவிந்து வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆத்மா சிவக்குமாரை இன்று கைது செய்தனர்.

    இவருக்கு மோசடியில் உதவிய அவரது அக்கா சத்திய பாமா, உறவினர் ஜெயகிருஷ்ணன், மணிகண்டன், சரவணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சில மாதங்களாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஆத்மா சிவக்குமார் மீது போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசார் கைது செய்து விடுவார்கள் என தலைமறைவாக இருந்த ஆத்மா சிவக்குமார் தற்போது சிக்கி உள்ளார். மோசடி செய்த பணத்தில் பல இடங்களில் இவர் அடுக்குமாடி வீடுகள், நிலங்கள் வாங்கி குவித்திருப்பதாக தெரிகிறது. இவற்றை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது
    • வத்தலக்குண்டு பகுதியில் தொடர்ந்து குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் குட்கா விற்பனை குறைந்தபாடில்லை.

    வத்தலக்குண்டு :

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு முக்கிய சந்திப்பாக உள்ளது. கொடைக்கானல், மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வத்தலக்குண்டு வழியாக சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் பஸ்நிலையத்தில் குடிமகன்கள் மற்றும் பிக்பாக்கெட் திருடர்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வத்தலக்குண்டு பகுதியில் தொடர்ந்து குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் குட்கா விற்பனை குறைந்தபாடில்லை.

    பட்டிவீரன்பட்டி குறுக்குேராடு கன்னிமார்கோவில் தெருவைசேர்ந்தவர் நாசர்முகமது(42). அ.தி.மு.க பிரமுகரான இவர் எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளராக உள்ளார். வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் பதுக்கி குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையில் போலீசார் கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து நாசரை கைது செய்தனர். வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த இவர் திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவரிடம் டாஸ்மாக் பார்களை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நெல்லையப்பன் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் அவர் அளித்த மரண வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக இருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

    அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×