என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumuganeri"

    • கட்டிட தொழிலாளி முத்து பிரகாஷ் மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் முக்காணிக்கு சென்றுள்ளனர்.
    • ஆறுமுகநேரி சாலையில் எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளன்புதுரை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு அனுசியா (22) என்ற மனைவியும் வினோதினி என்கிற 8 மாத குழந்தையும் உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் முக்காணிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஆத்தூர்- ஆறுமுகநேரி சாலையில் எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்து பிரகாஷ், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. குழந்தை வினோதினிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 3 பேரும் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறிவுறுத்தினார்

    ஆறுமுகநேரி:

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் நம் பள்ளி நம் பெருமை என்ற ஆய்வுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதன்படி திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள 6-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 1 வகுப்பு மாணவி களிடம் பாடங்கள் தொடர்பான வினாக்களை கேட்டறிந்தார்.பின்னர் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும் மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறி வுறுத்தினார். மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வசதிக்காக பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஆதவா தொண்டு நிறு வன தலைவருமான பால குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
    • நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழா மற்றும் சோனியா காந்தி பிறந்த தின விழா ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார செயலாளர் அழகேசன், தூத்துக்குடி மாவட்ட செய லாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நகர துணை தலைவர்கள் சிவகணேசன், மூக்கன் கிறிஸ்டியான் நகரச் செய லாளர்கள் ராஜலிங்கம், நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி காமராஜபுரம் பிஷப் அசரியா வேதாகம பள்ளியின் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 60 ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளும், 100 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காமராஜபுரம் பிஷப் அசரியா வேதாகம பள்ளியின் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    பள்ளியின் இயக்குனர் அந்தோணி அடிகளார் தலைமை தாங்கினார். ஏரியா பொருளாளர் விக்டர் ராஜா முன்னிலை வகித்தார். நற்செய்தி குழு தலைவர் ஜோனோ பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் நடத்தினார். முன்னாள் பொருளாளர் பாலன் தாமஸ் சிறப்பு ஜெபம் நடத்தினார். தொழிலதிபர் ஞானராஜ் கோயில்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்திய மிஷனரி இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். அமைப்பின் தலைவர் பாஸ்கரன், அரசு வக்கீல் சாத்ராக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 60 ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளும், 100 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும் தையல் எந்திரங்கள், சிறு தொழில் செய்வோருக்கான நிதி உதவி மற்றும் 3 பேருக்கு ஆடுகளும் வழங்கப்பட்டன. விழாவில் முள்ளக்காடு தொழிலதிபர் கிறிஸ்துதாஸ், போதகர்கள் வாட்சன், மோசஸ், ஜெயபாண்டி, கிறிஸ்தவ சபை நிர்வாகி சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் பஸ் நிறுத்த விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

    இதற்காக ஸ்டேட் வங்கி அருகில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும், பழுதடைந்துள்ள கிணறு ஒன்றையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் திருச்செந்தூர் நோக்கி செல்லும் பஸ்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கவும், தூத்துக்குடி நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்ல காமராஜ் பூங்கா அருகே மற்றொரு பஸ் நிறுத்தம் அமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் போக்குவரத்தை சீர் செய்வதற்காக மெயின் பஜார் சந்திப்பு, ஸ்டேட் பாங்கி நிறுத்தம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்வதற்காக வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நவீனப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அகஸ்டின், நகர அ.தி.மு.க செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, பாரதீய ஜனதா நகர தலைவர் முருகேச பாண்டியன், நகர்நல மன்ற தலைவர் பூபால் ராஜன், காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் ராமஜெயம், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.
    • சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மறுநாள் காலையில் யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து அன்னா பிஷேகமும் நடந்தன. மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் பின்னர் அன்னதானமும் நடந்தன.

    இரவில் 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். உழவார பணிகளில் ஈடுபட்ட பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பூஜை ஏற்பாடுகளை ஆலய பூசாரி அய்யப்ப பட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, போகன், மண்டக படிதாரர்கள் கனகம்மாள், தொழிலதிபர் சிவக்குமார், திருச்செந்தூர் தபால் துறை ஊழியர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் திருநாளுக்காக தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
    • பொங்கல் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து இரட்டை ரெயில்பாதை பணியினை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது-

    இரட்டை ெரயில் பாதை மற்றும் பராமரிப்பு காரணமாக தென்னக ெரயில்வே செய்திக்குறிப்பில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் அந்யோதயா சிறப்பு ரெயில்கள், மற்றும் பல தென்மாவட்ட ெரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் இன்று (9-ந்தேதி) மற்றும் 10,11-ந்தேதிகளில் ரத்து செய்யப்படும் என்று தென்னக ெரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் திருநாளுக்காக தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இப்படியான கால கட்டத்தில் முக்கிய வழித்தடத்தில் ெரயில்கள் ரத்து செய்யப்படுவது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். பஸ் பயணத்திற்காக மக்கள் முந்தி அடிக்கும் நிலை ஏற்படும். ஆம்னி பஸ் கட்டணமும் அதிகரிக்கும்.

    இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு தென்னக ெரயில்வே மதுரை மண்டல பராமரிப்பு பணிகள் குறிப்பாக இரட்டை ெரயில்பாதை பணியினை பொங்கல் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் பாலகுமரேசனை தாக்கியது.
    • ஆறுமுகநேரியில் மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாலகுமரேசன். இவர் தனது அறக்கட்டளை மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.

    பின்னர் மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பெற்று அவர் தற்போது வீடு திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில் பாலகுமரேசன் தனது அறக்கட்டளை பணி யாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    எங்களது தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளை தத்து எடுத்து ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி செலவை ஏற்று சமூக பணியாற்றி வருகிறோம். மேலும் பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறோம்.

    ஆறுமுகநேரி பகுதியில் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்னை நேரில் வந்து மிரட்டி சென்றதுடன், எனது மாட்டு தொழுவத்தையும் தீ வைத்து எரித்து விட்டனர்.

    இதுகுறித்து நான் கொடுத்த புகாரின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து எனது ஓட்டலுக்கே வந்து என்னை மிரட்டி சென்றார். நான் உடனடியாக ஆறுமுக நேரி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்து பாது காப்பு கேட்டேன். ஆனால் போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி ஒரு கும்பல் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பி உள்ளேன்.

    தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால் போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். துப்பாக்கி வைப்பதற்கு லைசன்ஸ் வழங்க வேண்டும். என் மீது திட்டமிட்டே கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஆறுமுகநேரி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது.
    • நவீன எந்திரங்கள் மூலம் குப்பையை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

    குப்பை அகற்ற நடவடிக்கை

    இந்த நிலையில் அங்கிருந்து குப்பையை அகற்ற தற்போதைய பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.இதற்காக நவீன எந்திரங்கள் மூலம் குப்பையை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனிடையே வேறு இடத்தில் புதிதாக குப்பைக் கிடங்கு அமைக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கான இடத்தை தேர்வு செய்ய அவர் நேற்று மாலை ஆறுமுகநேரிக்கு வருகை தந்தார். இந்தகள ஆய்வு பணியின் போது அவருடன் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதனும் வந்திருந்தார். கலெக்டரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். வார்டு கவுன்சிலர்கள் வெங்க டேசன், ஆறுமுகநயினார், மாரியம்மாள், ரமா, புனிதா, தீபா, புனிதா சேகர், தயாவதி, ஜெயராணி, மரிய நிர்மலா தேவி, சகாயரமணி, ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    மோட்டார் சைக்கிளில் சென்ற கலெக்டர்

    அப்போது கொட்டமடை காடு பகுதியில் உள்ள இடத்தை பார்வையிட புறப்பட்டபோது அந்த வழியில் பாதை பழுதடைந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி அதனை ஓட்டியபடி கலெக்டர் செந்தில் ராஜ் அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொட்டமடை காடு பகுதிக்கு சென்று ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வி.ஏ.ஓ வை அமர வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிக்கான குப்பை கிடங்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காயல் பட்டினம் கடையக்குடி பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது திருச்செந்தூர் துணை கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், காயல் பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, கமி ஷனர் குமார் சிங், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சப்பரபவனியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் அறநிலைய குரு செட்ரிக் பீரிஸ் அடிகளார் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பெரியதாழை உதவி பங்குதந்தை கிங்ஸ்லின் மறையுறை நிகழ்த்தினார்.விழா நாட்களில் தினசரி மாலையில் திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன.

    12-ந் நாளான நேற்று காலை ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாய்சியஸ் உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி ஆயர் இல்ல பொருளாளர் சகாயம் மாலை ஆராதனையை நடத்தினார். தூத்துக்குடி திருஇருதயங்களின் பேராலய பங்கு தந்தை ரோலிங்டன் உரை நிகழ்த்தினார். இரவில் புனித அந்தோணியார் சொரூப சப்பரபவனி தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.

    இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை காலையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும், புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பின்னர் திருமுழுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாலையில் நற்கருணையாசிரை தொடர்ந்து கொடி இறக்கப்படுகிறது.

    நிறைவு நாளான நாளை பொது அசனம் நடைபெறுகிறது.

    • ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகே நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் போதை பழக்கம் காரணமாக தொடர்ந்து சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் இதில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    தனிப்படை

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வட்டாரங்களில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை கண்டுபிடித்து கைது செய்ய திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடை யப்பன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக் குமார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் ஆறுமுகநேரியை சேர்ந்த ஹரிஷ் கிருஷ்ணன் ( வயது 20), கீழ சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (19), திருச்செந்தூரை சேர்ந்த முத்துராமன் (21) என்பதும் அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கைது

    உடனடியாக அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1,10 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியதாக மோட்டார் சைக்கிளையும் 3 செல்போன்களையும் பறி முதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் மூன்று பேரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதி கோபுரங்களிலும் அபிஷேகம் நடந்தது.
    • வாலவிளை பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகா கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் வருடாந்திர கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதற்கான முன்னேற்பாடு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று காலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து கும்ப பூஜை, யாக பூஜை, திரவிய ஹோமம், துர்கா ஹோமம் ஆகியவை நடந்தன.

    இதன் பின்னர் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதே போல் சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதி கோபுரங்களிலும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாரிய ம்மன், உச்சினிமாகாளி, முப்புடாதி அம்மன், அக்கினி காளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. ஐயப்ப சிவாச்சாரியார், ஆலய பூஜகர் சங்கர நயினார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் லட்சார்ச்சனை தொடங்கியது.இரவில் திருவிளக்கு பூஜையும் அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

    நிறைவு நாளான இன்று மதியம் சிறப்பு பூஜையும் மாலையில் லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், சமூக ஆர்வலர் அமிர்தராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சந்தன மாரியம்மன்

    விநாயகர் கோவில் தெரு சந்தன மாரியம்மன் மற்றும் உச்சினிமாகா ளியம்மன் கோவிலிலும் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக பூஜை, பூரணாகுதி நடந்தது.இரண்டு சன்னதிகளின் விமான கோபுரங்களில் கும்பாபி ஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் சைவ வேளாளர் சங்க நிர்வாகிகளுமான சங்கரலிங்கம், முருகன், கற்பக விநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீ ராமசுவாமி கோவில்

    மேலும் ஆறுமுகநேரி காந்தி தெரு மேல வீடு ஸ்ரீ ராமசுவாமி கோவிலிலும் வருடாந்திர கும்பாபிஷேக விழா நடந்தது.வாலவிளை பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகா கும்பா பிஷேக விழா நடை பெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று ஒரே நாளில் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் ஆறுமுகநேரி விழா கோலம் பூண்டு காட்சியளித்தது.

    ×