என் மலர்
நீங்கள் தேடியது "Athoor Kamarajar Dam was full"
- 23.5 அடி உயரம் கொண்ட காமராஜர் அணையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்தது.
- தற்போது 3-வது முறையாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிைடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் சின்னாளபட்டி, செம்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைகிராமங்களில் பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.
இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 23.5 அடி உயரம் கொண்ட காமராஜர் அணையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 11 மணியளவில் அணையின் முழுகொள்ளளவை எட்டி மறுகால் பாய தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதன்முறையாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அதன்பின்னர் செப்டம்பர் 5-ந்தேதி அணை நிரம்பியது. தற்போது 3-வது முறையாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிைடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டு வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணைப்பகுதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வத்தலக்குண்டு பகுதியில் கண்மாயில் மூழ்கி 3 பேர் பலியானார்கள். மேலும் திண்டுக்கல் பகுதியிலும் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் தொடர்ந்து எச்சரிக்கைவிடப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் அலட்சியத்தால் ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் தொடர்ந்து ஆபத்தான முறையில் குளித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.