என் மலர்
நீங்கள் தேடியது "bimstec meeting"
- பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
- நாகை-திரிகோணமலை இடையே எண்ணை குழாய் ஒப்பந்தம்.
சென்னை:
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக் கடலை சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்து பேசுவதை வழக்கத்தில் வைத்து உள்ளனர். இந்த சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, தீவிர வாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விசயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.
"பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் அவர் வங்க தேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அப்போது அவர் பிரதமர் மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் 3 தடவை இலங்கைக்கு சென்று இருக்கிறார். தற்போது 4-வது முறையாக அவர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.
இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது அதிகரித்து வருகிறது.
மீன்பிடி படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிறிது காலத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திரும்பி கிடைப்பது இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி இலங்கை செல்வதால் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசுவாரா? என்ற ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.